ஆளுநரை சந்தித்தது ஏன்? – கிருஷ்ணசாமி விளக்கம்!

Published On:

| By Selvam

அருந்ததியருக்கான மூன்று சதவிகித உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அக்கட்சியினரை காவல்துறையினர் நேற்று (நவம்பர் 7) கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்தநிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கிருஷ்ணசாமி இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை திரும்ப பெற வேண்டும், வடக்கு மாவட்டங்களில் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகளை தடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பேரணியாக வந்து ஆளுநரிடம் மனு அளிப்பதாக இருந்தது.

இந்த பேரணிக்கு முதலில் அனுமதி அளித்த காவல்துறை, திடீரென்று பேரணிக்காக வந்தவர்களை கைது செய்து பல்வேறு மண்டபங்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக அடைத்துவைத்தனர். அதன்காரணமாக, நேற்று ஆளுநரை சந்திக்க  முடியவில்லை. அதனால் இன்று ஆளுநரை சந்தித்தோம்.

தமிழகத்தின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 15 முதல் 20 சதவிகிதம் வரை இருக்கக்கூடிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய வகையிலும், வடக்கு மாவட்டத்தில் வசிக்கும் பறையர் சமுதாய மக்களின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையிலும் உள்ள அருந்ததியருக்கான மூன்று சதவிகித உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய தமிழக அரசுக்கு ஆளுநர் அறிவுறுத்த வேண்டும் என்று மனு அளித்தோம்.

2006 வன உரிமைச் சட்டத்தின் படி மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக வேலை செய்த தொழிலாளர்கள் அங்கேயே வாழ்வதற்கும் அவர்கள் வாழ்வுரிமைக்காக 10 ஏக்கர் நிலம் பெறுவதற்கும் உரிமை பெற்றவர்கள். எனவே, அந்த சட்டத்தின்படி அவர்களை அங்கேயே வாழ வைக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் அறிவுறுத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளோம்.

தென் தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களை வன்முறை கும்பல் தாக்குகிறார்கள். இதனால் தென் மாவட்டங்களில் மீண்டும் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அதனால் தென் மாவட்டங்களில் மத்திய அரசின் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும்.

தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர்களுக்கும், வட மாவட்டங்களில் பறையர் சமுதாய மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும். தமிழக காவல்துறை ஒருதலைபட்சமாக ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதையெல்லாம் ஆளுநரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“எவ்வளவு நாட்கள் சிறையில் வைக்கப்போகிறீர்கள்?” போதை ஜோடிக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்!

தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி இணையும் ‘D55′ ! : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share