2011 ஆம் ஆண்டு சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் போயஸ் கார்டனில் இருந்தே வெளியேற்றினார் ஜெயலலிதா. மேலும் சசிகலாவுடன் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டார். சில மாதங்களுக்குப் பின் சசிகலா மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த நிலையில் சசிகலாவை மட்டும் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா.
இந்த பின்னணியில் சசிகலா- ஜெயலலிதாவுக்கு இடையே ஏற்பட்ட விரிசல் குறித்து சசிகலாவின் நாத்தனார் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா ஆறுமுகசாமி ஆணையத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் விளக்கியிருக்கிறார்.
“19-11-2011 இல் சசிகலா போயஸ் கார்டனை விட்டு வெளியேறினார்.
எனது தாயாரும் சசிகலாவும் எனது வீட்டுக்கு நேரடியாக வந்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு விசாரித்ததில் அவர்களிடம் இருந்து நான் தெரிந்துகொண்டது என்னவென்றால்… திவாகர், சசிகலாவின் உறவினர் மற்றும் சிலர் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றிவிட்டதாகவும் தன்னை சுற்றி தவறு நடப்பதாக ஜெயலலிதா தெரிவித்ததாகவும், ராமானுஜம் அளித்த உளவு அறிக்கை மூலம் தனக்கு இது தெரியவந்ததாகவும் முதல்வர் கூறியிருக்கிறார். அதனால் சசிகலா கார்டனை விட்டு வெளியேறியதாக எனக்குத் தெரியவந்தது” என்று கிருஷ்ணபிரியா கூறியுள்ளார்.
மேலும், “எந்த ஒரு அலுவலரோ அமைச்சரோ சசிகலாவுக்கு தெரியாமல் பதவியில் இருக்க முடியாது. 2011க்கு முன்னர் அது எந்த பொருண்மையாயினும் சசிகலாவால் சம்பந்தப்பட்ட நபர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கப்பட்ட பின்னர் செயல்படுத்தப்படும். சசிகலா மீண்டும் போயஸ் கார்டனுக்கு வர 31-03-2012 முதல் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் 2012 க்குப் பிறகு சசிகலாவுடன் அரசியல் மற்றும் அலுவல் சார் பணிகளில் ஜெயலலிதா விலகியே இருந்தார்.
சசிகலா கார்டனை விட்டு சென்றபோது சோவின் மகன் ஸ்ரீராம் மற்றும் மனோஜ் பாண்டியன் போயஸ் கார்டனில் இருந்தனர்” என்றும் கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயலலிதா ஆட்சியில் உயர் பதவியில் இருந்த காவல்துறை அதிகாரிகளான அம்ரேஷ் பூஜாரி, தாமரைக் கண்ணன், ஜார்ஜ், ராமானுஜம் ஆகியோரிடம் விசாரித்தபோது, “சசிகலாவை கார்டனில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றியது ஏன் என்று எங்களுக்குத் தெரியாது” என்று கூறியுள்ளனர்.
அவர்களது சாட்சியங்களில் இருந்து 2011 இல் சசிகலாவை கார்டனில் இருந்து வெளியேற்றியது ஜெயலலிதாவின் சொந்த முடிவு என்றும், சசிகலா மீதான அவரது சந்தேகம் காரணமாக அப்படி செய்திருக்கலாம் என்றும் கருதலாம்” என்று ஆறுமுக சாமி ஆணைய அறிக்கை கூறுகிறது.
-வேந்தன்
பெங்களூருவில் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா குடும்பம் நடத்திய கூட்டம்!
ஜெ. மரணம்: அப்பல்லோ மீது ஆறுமுகசாமி ஆணையத்தின் பகீர் புகார்கள்!