பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (மார்ச் 10 ) தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களில் பாஜக அலுவலகங்களை திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டுரோட்டில் பாஜக தலைமை அலுவலகத்தை இன்று திறந்து வைத்தவர், அதனை தொடர்ந்து, 75 அடி உயரக் கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார்.
பின், தருமபுரி, நாமக்கல், திருச்சி, தேனி, விருதுநகர் , தூத்துக்குடி ,புதுக்கோட்டை , திருவள்ளூர், விழுப்புரம் மாவட்ட பாஜக அலுவலகங்களை காணொளி மூலமாக திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர் “நாடு முழுவதும் பாஜகவுக்கு 887 மாவட்ட அலுவலகங்கள் திறக்க முடிவு செய்துள்ளோம். அதில் 290 அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரே நாளில் 10 பாஜக அலுவலகம் திறக்கப்பட்டது இதுவே முதல்முறை. பாஜக-வின் அலுவலகம் 24 மணிநேரமும் திறந்திருக்கும். ஆக்கபூர்வமான விவாதங்களும் ஆலோசனை நடத்தி கட்சியை வளர்க்க வேண்டும். அனைத்து மாவட்ட தலைமையகத்திலும் நவீன முறையில் பாஜக அலுவலகம் திறக்க அமித்ஷா நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்று பேசிய நட்டா தொடர்ந்து,
“தமிழகத்தைப் போன்று மற்ற மாநிலங்களிலும் திருக்குறளுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு பெயர் போனது திமுக. பல்வேறு மாநிலங்களில் குடும்ப அரசியல் நடக்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்டுகளுடன் சண்டை போடும் காங்கிரஸ், திரிபுராவில் நட்பு பாராட்டி வருகிறது.
காங்கிரஸ் கட்சி பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறது. மற்றொரு புறம் குடும்ப அரசியல் நடத்துகிறது. ஆனால், பிரதமர் மோடி வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டு ஆட்சி செய்கிறார்” என்றார்.
மேலும், ”முன்பு 98 சதவீத செல்போன் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. பாஜக அரசு தமிழகத்துக்கு 9 ரயில்வே திட்டங்களை கொடுத்துள்ளது. 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தனர்? பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும். ஏனென்றால், பாஜக மட்டும்தான் கொள்கை சார்ந்த, தொண்டர்கள் சார்ந்த கட்சி” என்று கூறினார்.
இந்த நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி , மாநில அமைப்பு பொது செயலாளர்.கேசவவிநாயகம், மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் முன்னாள் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மூன்றாவது முறையாக அதிபராக பதவியேற்றார் ஜி ஜிங்பிங்
சட்டமன்ற உறுப்பினராக இளங்கோவன் பதவியேற்றார்!