கீதையிலும் மோதிக்கொண்ட ஓ.பன்னீர் – எடப்பாடி

அரசியல்

கிருஷ்ணன் உரைத்த கீதையில் இடம்பெற்றிருக்கும் ’நடப்பவை அனைத்தும் நன்மைக்கே’ என்ற வரியால் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மோதிக்கொண்டனர்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிக மகிழ்ச்சியில் உள்ளது.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தமது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ”எங்களுக்குள் (எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே) நடந்த கருத்து வேறுபாடுகளால் அதிமுகவுக்குள் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். அதில் எங்களுக்குப் பெரும் பாதிப்புதான், இருந்தாலும் பரவாயில்லை.

அ.தி.மு.கவினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதற்கு முன்பு நடந்த அனைத்துக் கசப்புகளையும் தூக்கி எறிந்துவிட்டு ஒன்றுபட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அவர் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 18) சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, “ஓ.பன்னீர்செல்வம் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு கொடுப்பார்.

யாரை எதிர்த்து பதவி பெற்றாரோ, அவர்களைத்தான் அழைப்பார். தர்மயுத்தம் போனதே சிலரை எதிர்த்துதான்.

அவர்களையும்தான் அழைக்கிறார்” என்று குறிப்பிட்ட அவர், இறுதியில், “அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்” எனக் கேள்வியெழுப்பினார்.

words conflict edappadi palanisamy and panneerselvam


எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

இதற்கிடையே நாளை (ஆகஸ்ட் 19) கிருஷ்ண ஜெயந்தி விழா வர இருப்பதையொட்டி, அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், எடப்பாடி பழனிசாமி.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “உயிர்களைக் காத்து உலகாளும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் எனது உளங்கனிந்த ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், “ ‘நடப்பவை அனைத்தும் நன்மைக்கே’ என்று கீதையில் கண்ணன் உரைத்த, ’எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்’ என்ற கண்ணனின் உபதேசத்தை மனதில்கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம்” என்று சொல்லியிருப்பதுதான் கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இதற்குக் காரணம், “நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்” என்று இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்த நிலையில், ’எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்’ என எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பது ஓ.பன்னீர்செல்வத்துக்கு அறிவுறுத்திய பதிலாகவே கருதுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

ஜெ.பிரகாஷ்

எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0