எடப்பாடியுடன் சி.வி.சண்முகம் சென்ற விவகாரம்: கே.பி.முனுசாமி பதில்!

அரசியல்

ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி அவரை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி ஈபிஎஸ் மீது வருத்தத்தில் இருக்கிறார்.

அதனால் தான் அவர் கடந்த 10ஆம் தேதி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று சலசலப்புகள் எழுந்தன.

ஆனால் அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுக் கடந்த சில தினங்களாக ஓய்வு மற்றும் சிகிச்சை பெற்று வந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.

இதுகுறித்து மின்னம்பலத்தில் கே.பி.முனுசாமிக்கு என்னாச்சு? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 15) கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

இந்த கட்சி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என சில விஷமிகள் செய்யும் செயல்களுக்குப் பதில் சொல்ல நான் வெட்கப்படுகிறேன் என்றார்.

தொடர்ந்து சி.வி.சண்முகத்துடன் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது குறித்தும், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கே.பி.முனுசாமி, அவர் என்னுடைய தம்பி. பல்வேறு சங்கடங்கள் வந்தாலும் இந்த இயக்கத்தில் பிடிப்பாக உள்ள ஒரு தொண்டர் சி.வி.சண்முகம். எப்படியாவது இந்த இயக்கத்தின் வேகத்தைக் குறைக்க, ஆட்சிக்கு வருவதைத் தடுக்க சில விஷமிகள் முயற்சி செய்கின்றனர். இந்த சித்து விளையாட்டு எல்லாம் காலப்போக்கில் கரைந்து போய்விடும் என்று கூறினார்.

ஓபிஎஸ் குறித்து பேசிய அவர், `கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட நபர் ஓ.பன்னீர் செல்வம். அவர் பொறுப்புகளை போடுகிறார் என்றால் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. அவர் போடுகின்ற பொறுப்பாளர்கள் அதிமுகவில் உறுப்பினர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

அதனால் அதை பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

ஒற்றைத் தலைமை தொடர்பாக அமைதியாக உட்கார்ந்து ஆலோசனை செய்து முடிவுக்கு வந்த போதே பன்னீர் செல்வம் எங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.
ஆனால் அதைச் செய்யாமல், தான் தோன்றி தனமாக தனக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் காட்டி தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் மிகப்பெரிய அவப்பெயரைச் சம்பாதித்து இருக்கிறார்.

ஒரு கட்சியின் தொண்டர் நீதிமன்றத்துக்கு செல்லக் கூடாது என்பது சட்டதிட்ட விதி. ஆனால் அவர் உச்ச நீதிமன்றம் வரை சென்று கொண்டிருக்கிறார்.

அதிமுகவுக்காக மிகப் பெரிய அளவில் எந்த தியாகத்தையும் செய்யாமல், பல்வேறு பெரிய பதவிகளை வகித்தவர். இன்று எல்லா வகையிலும் நல்ல நிலையில் இருக்கிறார்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த போது அப்போது அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆர் துணைவியார் ஜானகி தலைமையில் ஒரு அணியாக செயல்பட்டார். ஜெயலலிதா தலைமையில் இன்னொரு அணி செயல்பட்டது.

அந்த காலகட்டத்தில் அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அண்ணியார் ஜானகி ஜெயலலிதாவுக்குக் கட்சியை விட்டுக்கொடுத்தார்.

எம்.ஜி.ஆரின் சொத்தாகிய அதிமுகவை அவரது துணைவியார் விட்டுக்கொடுத்தார். இப்போது அந்த தலைமை கழகமே அண்ணியார் ஜானகி பெயரில் தான் இருக்கிறது. அது அவருடைய சொத்து. அதையே விட்டுக்கொடுத்தவர் ஜானகி.

ஆனால் ஏதோ ஒரு வாய்ப்பு காரணமாக மிகுந்த உயர்ந்த இடத்துக்கு வந்த பன்னீர் செல்வம், இந்த இயக்கத்தால் தான் சமூகத்துக்கு அடையாளம் தெரிந்தவர். எனவே, இந்த இயக்கத்திற்கு நம்மால் எந்தவித களங்கமும் வந்துவிடக் கூடாது என்று ஒதுங்கியிருந்தால் பாராட்டியிருக்கலாம்.

மாறாக சுநயலத்திற்காகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அந்த சுயநலவாதியைப் பற்றி அதிகமாகப் பேச வேண்டிய அவசியமில்லை` என்று கடுமையாக விமர்சித்தார்.

சட்டமன்ற இருக்கை குறித்துப் பேசிய அவர், இதுகுறித்து சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், ஏற்கனவே எங்கள் தரப்பில் தீர்மானம் போட்டு சபாநாயகரிடம் ஒப்படைத்திருக்கிறோம். அதன்மீது அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது` என்று கூறினார்.

ஓபிஎஸ் பற்றிய கேள்விகளுக்கு, முடிந்துபோன கட்டுரைக்கு முன்னுரை எழுத மீண்டும் மீண்டும் முயல்கிறீர்கள் என்றும் பதிலளித்தார்.

பிரியா

இந்தியைத் திணித்தால் டெல்லியில் போராட்டம் : உதயநிதி

”பீகார் வழியில் தமிழகத்திலும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” – சீமான்

+1
0
+1
4
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *