வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டா சில போட்டோக்களை அனுப்பியது. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டிய கூட்டத்தின் புகைப்படங்கள்தான் அவை. போட்டோக்களைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தன் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (அக்டோபர் 10) இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது ஒருபக்கம் என்றால், இந்த முக்கியமான கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான கே.பி.முனுசாமி பங்கேற்கவில்லை என்பதுதான் அதைவிட முக்கியமாக அதிமுகவினரால் எழுப்பப்படும் கேள்வி.
அதிமுக ஒற்றைத் தலைமை தொடர்பாக கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இப்போது வரை பன்னீருக்கும் எடப்பாடிக்கும் வெளிப்படையான கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவுக்கு தடை கேட்டு நடத்திய சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது.
அதில் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பிறகு அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி துணைப் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். அவரோடு நத்தம் விசுவநாதனும் துணைப் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார்.

அந்த ஜூலை 11 பொதுக்குழு மேடையிலேயே கே.பி.முனுசாமிக்கும், சி.வி.சண்முகத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஓபிஎஸ்சை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முனுசாமி சொன்னபோது…
இதுபற்றி நான் தானே பேச வேண்டும் என்று ஆவேசமாக குரல் எழுப்பினார் சி.வி. சண்முகம். இருவருக்கும் இடையே எடப்பாடி சமரசம் செய்து அப்போதைக்கு அமைதிப்படுத்தினார்.
ஆனால் முனுசாமிக்கும் சி.வி.சண்முகத்துக்குமான மோதல் இத்தோடு நிற்கவில்லை. கே.பி.முனுசாமி தர்மயுத்தம் காலத்தில் இருந்தே ஓ.பன்னீர் செல்வத்துக்கு வலதுகரமாக இருந்தவர். பன்னீரோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர். ஆனால் அவர் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக நின்றார்.
இதனால் பன்னீர் அதிர்ச்சி அடைந்தார். இப்படி எடப்பாடியோடு நெருக்கம் காட்டிய முனுசாமி ஏன் அக்டோபர் 10 அதிமுக கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.வாக மட்டுமல்ல கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் இருக்கும் கே.பி.முனுசாமி இன்றைய கூட்டத்தில் உடல் நிலை சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் அனுப்பியிருக்கிறார்.
ஆனால் தனது சொந்த ஊரான காவிரிப்பட்டினத்தில் நன்றாகத்தான் இருக்கிறார் என்கிறார்கள் தர்மபுரி அதிமுகவினர்.

அவர்களிடம் விசாரித்தபோது, ‘பன்னீரையே எதிர்த்துக் கொண்டு… தான் எடப்பாடி பக்கம் வந்த நிலையிலும் எடப்பாடி தன்னை கௌரவமாக நடத்தவில்லை என்று சில வாரங்களாகவே குறைபட்டுக் கொண்டிருந்திருக்கிறார் முனுசாமி.
எடப்பாடி அண்மையில் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். அப்போது அவரோடு வேலுமணியும், சி.வி.சண்முகமும் தான் சென்றனர். கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான தன்னை அமித் ஷாவை சந்திக்க அழைத்துச் செல்லாமல், அமைப்புச் செயலாளரான சி.வி. சண்முகத்தை அழைத்துச் சென்றிருக்கிறாரே என்று அப்போதே தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டுள்ளார் முனுசாமி

இந்த நிலையில்தான்… அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானபின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்துக்காக அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், தலைமை நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆனாலும் சி.வி.சண்முகத்துக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தை எடப்பாடி பழனிசாமி அளிக்கிறார் என்ற வருத்தத்தில் இக்கூட்டத்தையே புறக்கணித்திருக்கிறார் கே.பி.முனுசாமி. இந்தத் தகவலை கேட்டு ஓ.பன்னீர் தரப்பினர் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.
அப்பா இல்லாத இடத்தில்… கனிமொழிக்கு ஸ்டாலின் உருக்கமான பதில்!
கூட்டணி மற்றும் பிற தலைவர்களுக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்