kp munusamy says karuppannan

கூட்டணி முறிவு: கருப்பண்ணன் கருத்துக்கு கே.பி.முனுசாமி மறுப்பு!

அரசியல்

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாஜக வற்புறுத்தியதே கூட்டணி முறிவுக்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்த கருத்தை துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மறுத்துள்ளார்.

ஈரோட்டில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்,

“2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டுமாம். இதனை அதிமுகவினர் யாராவது ஏற்றுக்கொள்வார்களா.

பாஜகவில் எத்தனை பூத் கமிட்டியில் ஆட்கள் உள்ளது, எத்தனை பூத் கமிட்டியில் ஆட்கள் இல்லை என்பது அதிமுகவிற்கு தெரியும். வாக்குச்சாவடியில் 5 பேர் 10 பேர் இருக்கிற ஒரு கட்சி தலைவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று சொல்லி 2.5 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியை வலியுறுத்தினால் அதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

அதனால் தான் அதிமுக பாஜக கூட்டணி துண்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

கே.சி.கருப்பண்ணனின் கருத்துக்கள் அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கே.பி.முனுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி,

“ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கட்டுக்கோப்பாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். பண்ருட்டி ராமச்சந்திரன் அடுத்தவர்களை கெடுக்கும் புத்தி உடையவர். அப்போதும் கெடுக்க முயற்சி செய்தார்.

நம்பிக்கை துரோகத்திற்கு பெயர் போன பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பிக்கை துரோகியான ஓ.பன்னீர் செல்வத்துடன் உட்கார்ந்துகொண்டு அவரை எனக்கு நம்பிக்கைக்கு உரியவர் என்கிறார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு  தர்மயுத்தம் நடத்த போகிறேன் என்றார் ஓ.பன்னீர் செல்வம். நானும் அவருடன் சென்றேன். ஜெயலலிதா மறைவுக்கு சசிகலா மீது சந்தேகம் என்றார். கால சூழ்நிலை மாறியவுடன் அவரை தலைவியாக ஏற்றுக்கொள்கிறார்.

தன்னுடைய சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக கொள்கைகளை விற்று ஆதாயம் தேடும் இரண்டு தலைவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

பண்ருட்டி ராமச்சந்திரன், ஹெச்.ராஜா தேர்தலில் எவ்வளவு ஓட்டு வாங்குவார்கள். ஹெச்.ராஜா கண்மூடித்தனமாக அதிமுகவை விமர்சனம் செய்கிறார். நாங்கள் விரல்காட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் தான் ஹெச்.ராஜா” என்றார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாஜக வற்புறுத்தியதே கூட்டணி முறிவுக்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கருத்துக்கு பதிலளித்த முனுசாமி,

“அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி கூட்டணி முறிவுக்கான காரணத்தை அனைவருக்கும் தெரிவித்துவிட்டோம். சில சமயங்களில் வலைதளங்களில் தவறான கருத்துக்களை படித்துவிட்டு மேடையில் உண்மை நிலை மறந்து சொல்வது இயற்கை.

அப்படி தான் கருப்பண்ணன் சொல்லியிருக்கிறார். 2026-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை மக்கள் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை பார்க்கலாம். தமிழக மக்களை நம்பி தான் கட்சி நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

’சந்திரமுகி 2’: படக்குழுவிற்கு கடிதம் எழுதிய ரஜினிகாந்த்

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *