“அதிமுக திமுகவுக்குள் நடப்பது பங்காளி சண்டை” – கே.பி.முனுசாமி

Published On:

| By Selvam

kp munusamy says aiadmk madurai conclave

அதிமுக திமுக கட்சிகளிடையே நடப்பது பங்காளி சண்டை என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,

இந்த நிகழ்ச்சியில் கே.பி.முனுசாமி பேசும்போது, “இந்திய அரசியல் வரலாற்றில் தமிழகம் தனித்தன்மை வாய்ந்த மாநிலம். சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக தமிழகத்தில் தான் அண்ணா தலைமையில் தேசிய கட்சிக்கு மாற்றாக மாநில கட்சி ஆட்சியமைத்தது.

50 ஆண்டுகாலம் தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன. எந்த தேசிய கட்சிகளும், புதிதாக உருவான கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

தமிழக மக்களின் உணர்வுகளோடு, எண்ணங்களோடு, கொள்கைகளோடு திராவிட இயக்கத்தை அண்ணா உருவாக்கியுள்ளார்.

அண்ணாவுக்கு பிறகு எம்ஜிஆர் சிறந்த ஆட்சியை வழங்கினார். இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் 30 ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பல கட்சிகள் நம்மோடு கூட்டு சேரலாம். ஆனால் நேரடி போட்டி என்பது அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான். எந்த கட்சிகள் நம்மோடு கூட்டணி சேர்ந்தாலும் களத்தில் நின்று திமுகவுக்கு எதிராக போராடுவது அதிமுக தொண்டர்கள் தான்.

அதில் கூட்டணி கட்சிகள் யாரும் பங்கேற்பதில்லை. ஏனென்றால் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நடப்பது பங்காளி சண்டை.

ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரை மாநாடு ஆட்சி மாற்றத்திற்கான மாநாடாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அது குறித்து வட மாநில பத்திரிகைகளும் வட மாநில தலைவர்களும் பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

“பயிர் உயிருக்கு சமம்” – என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழிசை பேட்டி!

ஒரே அறையில் 500 பேர்… கழிப்பறை வசதி கூட இல்லை: மணிப்பூர் சென்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் வேதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share