”ஜெ.வை இழிவுபடுத்தியவர் கே.பி.முனுசாமி” -பதில் தாக்குதலில் பன்னீர் அணி!
“எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கே.பி.முனுசாமி, ஒரு பச்சைத் துரோகி. அதனால்தான் அவரிடமிருந்து நான் விலகிவிட்டேன்” என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் இன்று (ஆகஸ்ட் 23) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொதுக்குழுவே நடத்தக்கூடாது என்று முதலில் சொன்னவர் செங்கோட்டையன்தான்.
அப்படி, மீறியும் பொதுக்குழுவை நடத்தியது ஓ.பன்னீர்செல்வத்தை அசிங்கப்படுத்தத்தான். ஜெயலலிதாவுக்குக்கூட இவ்வளவு கூட்டம் கூடியதில்லை. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சீட்டே இல்லாமல் ரவுடிகளை இறக்கியவர் எடப்பாடிதான்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பெயர் அடிபடுகிறதே? அதற்கு ஏதாவது எடப்பாடி பதில் சொல்கிறாரா? இல்லையே! இதுகுறித்த நடவடிக்கையை தமிழக முதல்வர்தான் எடுக்க வேண்டும்.
சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர் நாங்கள் அல்ல. எடப்பாடி பழனிசாமிதான் இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் கொள்கையை ஏற்பவர்கள் எல்லோருக்கும் கட்சியில் இடமுண்டு. எடப்பாடி பழனிசாமிதான் இந்தக் கட்சியையே அழித்துவைத்திருக்கிறார். அவர், தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்திருக்கிறார்.
தேர்தல் ஆணையம் என்ன பெட்டிக்கடையா? அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் என்ன ஆகும்? எடப்பாடியும் அடிமட்டத் தொண்டனாகிவிடுவார். கட்சி குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் யார் புகார் கூறினாலும் ‘எல்லோரும் அமைதியாக இருங்கள். கட்சி உடைந்துவிடக் கூடாது’ என்றுதான் சொல்வார். அப்படி அவர் அமைதியாக இருந்ததைப் பார்த்து இன்று அவருக்கு திறமையில்லை, திராணியில்லை என்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருப்பதே பாரம் என்று கே.பி.முனுசாமி சொல்கிறார்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் இல்லையென்றால், கே.பி.முனுசாமிக்கு முகவரியே கிடையாது.
சாதிக்காக அன்புமணி ராமதாஸுக்கு எம்பி பதவி வாங்கிக்கொடுத்ததற்காக தன் பதவியையே இழந்தவர் கே.பி.முனுசாமி. கட்சி உணர்வு குறித்து பேசுவதற்கு முனுசாமிக்கு உரிமையே இல்லை. முனுசாமிக்கு எங்கெல்லாம் பணம் கொடுக்கிறார்களோ, அங்கெல்லாம் சாதகமாகச் சென்றுவிடுவார்.
சாதாரண தொண்டன் எவனாவது பதவி பெற முனுசாமியிடம் வந்தால், அவனை திட்டி அனுப்பிவிடுவார். ஆனால், யாராவது பணத்துடன் வந்தால் அவரை உட்காரவைத்து மரியாதை செய்வார். பணத்துக்காக பதவியை வாங்கிக்கொடுத்தவர் இந்த முனுசாமி. அவர் என்னை அருகில்வைத்து பேசியது ஏராளம். அதையெல்லாம் சொல்லவேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஒருமுறை ஜெயலலிதாவைப் பார்க்க அவரது அண்ணன் மகள் தீபா வந்தபோது, நான், ‘தீபா வருகிறார்’ என்று முனுசாமியிடம் சொன்னேன். அதற்கு அவர், ‘ஏற்கெனவே ஒரு பாப்பாத்தி (ஜெயலலிதா). இதில் இன்னொரு பாப்பாத்தியா (தீபா)’ என்றார். அப்போதே முடிவுசெய்தேன், இந்த முனுசாமி ஒரு பச்சைத் துரோகி என்று.
அதனால்தான் அவரைவிட்டு அன்றைக்கே வந்துவிட்டேன். ஓ.பன்னீர்செல்வத்தை அழிக்கவேண்டும் என்றுதான் எடப்பாடி தரப்பு நினைக்கிறார்களே, தவிர, திமுகவை ஜெயிக்க வேண்டும் என நினைப்பதில்லை. எல்லா இடத்திலும் தாம்தான் இருக்க வேண்டும் என பழனிசாமி நினைக்கிறார்.
கல்யாணத்தில் மாப்பிள்ளையாகவும், சாவு வீட்டில் பிணமாகவும் இருக்கவேண்டும் என அவர் நினைக்கிறார். வெளி உலகத்திற்கு வேண்டுமானால் உங்களைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் உள்ளுக்குள் நீங்கள் எந்த அளவுக்கு திமுகவுடன் கள்ள உறவில் இருக்கிறீர்கள் என்பது குறித்து எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
பன்னீருடன் பயணித்த ரகசியங்கள்: கே.பி.முனுசாமி அதிரடி அறிவிப்பு!