கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை தமிழக அரசு கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(செப்டம்பர் 14) தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வரையிலான ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தமிழக அரசு கடந்த வருடம் அனுமதி கொடுத்திருந்தது.
இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 11 முதல் இந்த திட்டம் செயல்பட தொடங்கியது. முதல் கட்டமாக கோவளத்தில் இருந்து திருவிடந்தை வரை இந்த வரை ஹெலிகாப்டர் சுற்றுலா இயக்கப்பட்டது. இதில் ஒரு பயணிக்கு ரூ.5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த சுற்றுலா பயணம் சுமார் 10 நிமிடத்திற்கு நீடிக்கும்.
இந்த சூழ்நிலையில் தான், இந்த திட்டத்தை கைவிடக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் “சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுச்சூழலுக்கும், பறவைகள் வருகைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் சேவையை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன.
பணக்காரர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்கான ஹெலிகாப்டர் சேவைக்காக மீட்க முடியாத சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்த தமிழக அரசே துணை போவது கண்டிக்கத்தக்கதாகும்.
கிழக்குக் கடற்கரையின் அழகை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு வசதியாக ஹெலிகாப்டர் குறைந்த உயரத்தில் பறப்பதால் மிக அதிக இரைச்சல் எழுகிறது. இது மக்களுக்கு மட்டுமின்றி பறவைகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்துகின்றன.
இதை சுட்டிக்காட்டி கடந்த ஜனவரி மாதம் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கும் செங்கை மாவட்ட ஆட்சியருக்கும் நான் கடிதம் எழுதினேன், அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை இப்போது மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஹெலிகாப்டர் தாழ்வாக பறப்பதால் ஏற்படும் இரைச்சல் அங்கு வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு பெரும் இடையூறாக உள்ளன. அதுமட்டுமின்றி, ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றாலும் கிழக்கு கடற்கரை சாலை பகுதி பாதிக்கப்படும்.
கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்படுவதால், கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுலா எந்த அளவுக்கு வளர்ச்சியடையுமோ, அதை விட அதிக சுற்றுலா வளர்ச்சியை, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிப்பதன் மூலம் எட்ட முடியும்.
இதைக் கருத்தில் கொண்டு கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால், சுற்றுச்சூழலையும், பறவைகளையும் பாதுகாப்பதற்காக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பசுமைத் தாயகம் மற்றும் பிற சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து பாமக நடத்தும் “ என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு சோனியா, நட்டா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!
நிறைய ரிலேஷன்ஷிப்ல இருந்தேன், இப்போ வெளியே வந்துட்டேன்- பகீர் கிளப்பும் ரெஜினா
“எடப்பாடி மேற்கொண்ட ஒப்பந்தங்களில் 10% கூட நிறைவேறவில்லை” – ஸ்டாலின்