அதிமுக என்பது ஒரே இயக்கம்தான் அதற்கு ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர் என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று (ஆகஸ்ட் 1) ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முதல் ஆளாக வந்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் அதிமுக பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்.
இதனை தொடர்ந்து ஈபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், பொள்ளாச்சி ஜெயராமனும் வருகை தந்தனர். அதிமுக பெயர் பலகை கோவை செல்வராஜிடம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பெயர் பலகையை அவர்கள் அருகில் எடுத்து வைத்து கொண்டனர்.
இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், “அதிமுக என்பது ஒரே இயக்கம் தான். அதிமுக தற்போது ஓபிஎஸ் தலைமையில் தான் அங்கீகரிக்கப்பட்டிருகிறது. ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் ஆணையம் கொடுத்த தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையத்திற்கு அவர்கள் தரப்பை கடிதம் எழுத சொல்லுங்கள், எடப்பாடி பழனிசாமி பெயர் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை தவிர வேறு எங்காவது அவர் பெயர் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக பெயர்பலகையை நகர்த்தி வைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், அமைச்சராக, எம்.எல். ஏவாக இருந்தவருக்கு இதை செய்ய கேவலமாக இல்லையா? தரமில்லாத செயல்பாடுகள் செய்பவர்களை தரமான மனிதர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர் செய்தது கேவலமான செயல். சிங்கம் சிங்கிளா தான் வரும் என தனி ஒருவராக வந்தது குறித்து கூறினார்.
- க.சீனிவாசன்