கோவை: வக்ஃப் திருத்த மசோதா நகலை கிழித்தெறிந்து எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Raj

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்ஃப் திருத்த சட்ட மசோதாவிற்கு இஸ்லாமியர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், வக்ஃப் திருத்த மசோதா நகலை கிழித்தெறிந்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முஸ்லிம் சமுதாயப் பெருமக்கள், செல்வந்தர்களால் பொது மக்களின் பயன்பாட்டுக்காக இறையருள் நாடி, தங்கள் பகுதிகளில் இருக்கும் மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் பெயரில் தானமாக வழங்கப்பட்டவையே வக்ஃப் சொத்துகள். அவை அசையும் சொத்துகளாகவும், அசையா சொத்துகளாகவும் இருக்கின்றன.

வக்ஃப் சொத்துக்களைக் கண்காணிப்பது அரசின் கடமை என்று கருதி, 1954-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்ஃப் வாரியங்கள் 1958-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டன.

1954-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம், 1995-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் அவற்றை கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன. வக்ஃப் சட்டம், 1995 என்று அது குறிப்பிடப்படுகிறது. Kovai SDPI Protest

இந்த நிலையில், வக்ஃப் வாரியத்தின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், வக்ஃப் வாரியம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்று கூறி, அதற்கான மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டுவந்திருக்கிறது.

அதன்படி, ‘வக்ஃப் சட்டம், 1995 என்பது ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம், 1995’ என்று அது பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சுமார் 40 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. Kovai SDPI Protest

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முஸ்லிம்களிடமிருந்து வக்ஃப் வாரிய சொத்துகளை அபகரிப்பதற்கான, சட்டத் திருத்தங்களை பாஜக கொண்டுவருகிறது என்று இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும்  பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாநகர மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வக்ஃப் திருத்த சட்ட மசோதா நகலை எரிக்கும் போராட்டத்தை நடத்தினர்.

சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து நகலை எரிக்க முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்ததால் நகலை கிழித்தெறிந்து அவர்களது கண்டனங்களை பதிவு செய்தனர். Kovai SDPI Protest

இது குறித்து பேசியுள்ள எஸ்.டி.பி.ஐ கோவை மத்திய மாவட்ட தலைவர் முகமது இஷாக், “ஜனநாயக நாடான இந்தியாவில் சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்களின் 9.4 லட்சம் கோடி ஏக்கர் வக்ஃப் சொத்துகளை மத்திய பாஜக அரசு புதிய திருத்த சட்டம் மூலம் அந்த இடங்களை ஆக்கிரமித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கு திட்டம் தீட்டி வருகிறது.

மேலும், காலம் காலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக இஸ்லாமிய முன்னோர்களால் வழங்கப்பட்ட அந்த சொத்துகளை இஸ்லாமியர்களுக்கு சொந்தம் இல்லாத சொத்துகளை போலவும் அரசாங்கத்திற்கும் அதில் குத்தகைக்கும் வாடகைக்கும் இருக்கக்கூடிய மக்களுக்கும் சொந்தமானதாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்” என்று முகமது இஷாக் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share