கோவை கார் வெடிப்பு: அண்ணாமலையிடம் இருக்கும் ரகசிய ஆவணம் என்ன?

அரசியல்

கடந்த அக்டோபர் 29 மாலை, தமிழக காவல் துறையின் தலைமையகத்திலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை கோவை குண்டு வெடிப்பு குறித்து கூறிய குற்றச்சாட்டுகளுக்கு மிக காட்டமாக பதில் அளிக்கப்பட்டிருந்தது.

“அண்ணாமலையின் புகார்கள் ‘அபத்தமானது’, ‘பொய்யாக பழிசுமத்துகிறார்’, ‘பொய் பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்’, ‘உண்மையில்லாத மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை பரப்புகிறார்’,

‘வதந்திகளை பரப்புகிறார்’, ‘காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம்’” என்று அண்ணாமலையை குறிவைத்தே அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையின் பின்னணி குறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது,

“அண்ணாமலையின் தொடர் குற்றச்சாட்டுகள், மக்கள் மத்தியில் ஒரு பேசுபொருளாக ஆவதை உணர்ந்த காவல்துறை தலைமை இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

மேலும் கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து தமிழக பாஜக, அரசியல் ஆதாயம் தேடுவதாகவும், இதுகுறித்து தகுந்த பதில் அளிக்காவிடில் அது ஆட்சிக்கு மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் எனவும் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டது.

தகுந்த ஆதாரங்களோடு இதற்கு பதிலளிக்க சொல்லி முதல்வரிடமிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்த பிறகு, இது குறித்த அறிக்கை தயாராகி, முதல்வரின் தனிச் செயலர்களில் ஒருவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள சொன்னது முதல்வர் அலுவலகம். திருத்தங்களுக்கு பின்பு அவ்வறிக்கை காவல் துறை தலைமை அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது” என்று கூறினர்.

இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, “தமிழக காவல்துறை சொல்வதில் சில உண்மைகள் உள்ளது எனவும்,

மத்திய உளவுத்துறை அக்டோபர் 18ல் அனுப்பிய அறிக்கை பொதுவாக அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கைதான். அதில் எந்த மாறுபாடும் அண்ணாமலைக்கு இல்லை.

ஆனால், தமிழ்நாடு போலீசின் உள் பாதுகாப்பு பிரிவு (Internal Security) ஜூலை மாதம் 19 ம் தேதி தமிழகத்தில் உள்ள காவல் ஆணையரகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

இது குறித்த விரிவான செய்தியை, ’குற்றவாளி படத்துடன் எச்சரித்த மாநில உள் பாதுகாப்பு பிரிவு: அலட்சியம் காட்டிய சட்டம் ஒழுங்கு பிரிவு’ என்கிற தலைப்பில் கடந்த அக்டோபர் 28ம் தேதி, நாம் முதன்முதலில் வெளியிட்டிருந்தோம்.

அதில் கோவை கார் வெடி விபத்தில் பலியான ஜமேஷா முபீனின் பெயரை குறிப்பிட்டு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

அது குறித்து தமிழக காவல்துறை கள்ள மவுனம் சாதித்து வருகிறதாகவும், அந்த சுற்றறிக்கையின் ஒரு நகல் அண்ணாமலையின் கையில் உள்ளது” எனவும் தெரிவித்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் அண்ணாமலை கேள்வி எழுப்பி வருவதாகவும், ஆனால் அந்த அறிக்கையை அவர் முழுவதாக வெளியிடப்போவதில்லை எனவும், அவ்வாறு வெளியிட்டால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சுனாமி வெடிக்கும் என்பதை அண்ணாமலை அறிந்தே இருக்கிறார் என்றும் கூறினர்.

வினோத் அருளப்பன்

தீபாவளி பரிசு : கர்நாடக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

அதிமுக இணைய வேண்டும்: பசும்பொன்னில் பன்னீர்

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *