வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் வேகவேகமாக மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“எங்கு பார்த்தாலும் 12 மணி நேர வேலை சட்டத்தைப் பற்றித்தான் பேச்சாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து இந்த விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக எதிர்க்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின்போதெல்லாம் திமுகவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகள் பக்க பலமாக இருந்தார்கள். ஆனால் இந்த ஆட்சியின் சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
12 மணி நேர வேலை பற்றி கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. உடனடியாக அதுபற்றி விவாதமோ வாக்கெடுப்போ நடத்தப்படவில்லை. அறிமுக நிலையிலேயே இதை சிபிஎம் உறுப்பினர்கள் எதிர்த்தனர். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனிடமும் இதை கைவிடுமாறு சட்டமன்றத்தில் சந்தித்து வலியுறுத்தினர். இந்த நிலையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இதுகுறித்து ஒரு விரிவான கடிதத்தை முதலமைச்சருக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி எழுதினார். சட்டமன்றம் நடப்பதால் தான் நேரடியாக செல்லாமல் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் மாலியிடம் கடிதத்தைக் கொடுத்து முதல்வரிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். 18 ஆம் தேதியே இந்த கடிதத்தை மாலி முதல்வரிடம் சட்டமன்றத்தில் நேருக்கு நேராக கொடுக்கிறார். அதை வாங்கி வைத்துக் கொண்டார் முதலமைச்சர். அதன் பின் இந்த மசோதா வாக்கெடுப்புக்கோ, விவாதத்துக்கோ எடுத்துக் கொள்ளப்படவில்லை.
திடீரென சட்டமன்றம் முடியும் நாளான ஏப்ரல் 21 ஆம் தேதி, போலீஸ் மானிய கோரிக்கைக்கு முதல்வர் பதிலுரை ஆற்றிவிட்டு சட்டமன்றத்தில் இருந்து வெளியே சென்ற பிறகு… முதல்வர் சட்டமன்றத்தில் இல்லாத நிலையில் 8 மணி நேர பணியை 12 மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்பார்க்காமல் கூட்டணிக் கட்சியினர் வெளிநடப்பு செய்தார்கள்.
திமுக கூட்டணிக் கட்சியினர், தொமுச தலைவர்கள் கூட இதை எதிர்பார்க்கவில்லை. தொமுச நிர்வாகிகள் சிலர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனிடம் பேசியிருக்கிறார்கள். அமைச்சரிடம் பேசியவர்கள், ‘அவர் என்னங்க செய்வாரு… அதிகாரிகள் சொல்றதை செஞ்சிருக்காரு’ என்கிறார்கள். வட இந்திய தொழிலாளர்கள் பிரச்சினை வந்தப்ப பிகார் குழு தமிழ்நாடு வந்தது. அப்ப கூட தொழிலாளர் நல அமைச்சரை கூப்பிடலை. ஒரே ஒரு அறிக்கை விட்டதோட அவர் வேலை அப்ப முடிஞ்சது. எல்லாமே அதிகாரிகள் முடிவுதான்’ என்கிறார்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களே. இந்த நிலையில் இடதுசாரிகள், வைகோ, திருமாவளவன் ஆகியோர் இந்த சட்டத்துக்கு எதிராக தொடர் இயக்கத்தை தீவிரமாக நடத்த திட்டமிட்டு வருகிறார்கள். இதனால் கூட்டணிக்குள் பிரச்சினை வரவும் வாய்ப்பிருக்கிறது என்றும் முதல்வருக்கு தகவல்கள் சென்றிருக்கின்றன.
கூட்டணிக்குள் இப்படி என்றால் திமுகவின் கோவை, திருப்பூர் நிர்வாகிகள் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், ‘ஏற்கனவே கொங்கு பகுதியில் திமுக வீக் ஆக இருக்கிறது. இப்ப எடப்பாடி தேர்தல் ஆணையத்தோட அங்கீகாரத்தையும் வாங்கிவிட்டார். இந்த நிலையில் திருப்பூர், கோவை என தொழிலாளர்கள் நிறைந்த பகுதியில் இந்த சட்டத்தால் தொழிலாளர்களின் எதிர்ப்பு பெரும் அளவில் திமுகவை நோக்கி வரும். இதை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கண்டிப்பாக எதிர்கொண்டாகவேண்டும். இதை முதல்வரிடம் கொண்டு செல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அமைச்சர் செந்தில்பாலாஜியும் இதை முதல்வரிடம் தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் கூட்டணி, இன்னொரு பக்கம் சொந்த கட்சிக்குள்ளே கொங்கு எதிர்ப்பு, ஸ்டாலின் இமேஜ் பாதிப்பு என்று சென்று சேர்ந்த ரிப்போர்ட்டுகளுக்குப் பின்னர்தான் ஏப்ரல் 24 ஆம் தேதி 12 மணி நேர வேலை சட்டம் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை அறிவித்திருக்கிறது அரசு. கூட்டணிக் கட்சிகளுக்காக கைவிடுவாரா அல்லது கார்ப்பரேட்டுகளுக்காக இந்த சட்டத்தை அமல்படுத்துவாரா ஸ்டாலின் என்பது தொழிற்சங்க கூட்டத்துக்குப் பின்னர் தெரிந்துவிடும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
ஆளுநராக இருந்த போதே ஏன் சொல்லவில்லை?: அமித்ஷா கேள்வி!
த்ரில் வெற்றி பெற்ற குஜராத் அணி!