கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. இங்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவத்தை அங்கிருந்த காவலாளிகளான ஓம் பகதூர் மற்றும் கிருஷ்ண தபா ஆகியோர் தடுக்க முயன்றனர்.
இதில் ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ண தபா படுகாயம் அடைந்தார்.
இந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து தொடக்கத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், தற்போது அந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கின் புகார்தாரரான கொடநாடு எஸ்டேட் காவலாளியான கிருஷ்ண தபாவிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
அவர், தற்போது நேபாளத்தில் இருப்பதால், அவரை இங்கு அழைத்துவந்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, எஸ்டேட்டின் 10ஆம் நம்பர் கேட்டில் இருந்த ஓம் பகதூர் காவலாளியை தாக்கி, அவரை மரத்தில் தலைகீழாக கட்டி, கொலை செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஓம் பகதூர் தலைகீழாகக் கட்டிவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மரம், தற்போது எஸ்டேட் நிர்வாகத்தினரால் அகற்றப்பட்டு அதற்குப் பதில் வேறொரு மரம் நட்டுவைக்கப்பட்டுள்ளது என விசாரணையில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
விசாரணை நிறைவடைவதற்கு முன்பாக, சம்பவம் நடைபெற்ற இடத்தில் அந்த மரம் வெட்டி, அகற்றப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புவதுடன், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜெ.பிரகாஷ்
தேவர் குருபூஜை : 500 கார்கள் ரெடி – மாஸ்காட்ட தயாராகும் ஓபிஎஸ்
சைதை சாதிக் மீது போலீசில் பாஜக புகார்!