Kodanadu case Edappadi exempted

கொடநாடு விவகாரம் : எடப்பாடி வழக்கில் முக்கிய உத்தரவு!

அரசியல்

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ். இவரது சகோதரர் தனபால், கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை குற்றம்சாட்டி பேட்டி அளித்து வந்தார்.

இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு இருக்கும் செல்வாக்கை குலைக்கும் வகையில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோன்று பேசி வருகிறார்” என்று தெரிவித்திருந்தார். ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க தனபாலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, தனபாலுக்கு தடை விதித்தது. அதோடு, இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது.

இந்த நிலையில், மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டு எட்பபாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் இன்று (டிசம்பர் 12) முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உத்தரவிட்டார்.
ஒரு மாதத்திற்குள் சாட்சிகளை பதிவு செய்து முடித்து அதன் அறிக்கையை ஜனவரி 12ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் தலைவர் மேத்யூ சாமுவேல் தன்னை பற்றி பேச தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த வழக்கிலும் சாட்சியங்களை பதிவு செய்ய மாஸ்டர் நீதிமன்றத்துக்கு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரினார். இதை ஏற்று கடந்த நவம்வர் 7ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி சதீஷ்குமார், மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமதி ஷஃபிக் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தேர்தல் ஆணையர் நியமன சட்ட திருத்த மசோதா… திமுக கடும் எதிர்ப்பு!

IPL2024: தோல்விக்கு கூட கலங்க மாட்டாரு… இந்த விஷயத்துக்கு செம கோபம் வரும்… முன்னாள் வீரர் ஓபன் டாக்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *