கொடநாடு கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கனகராஜ் அண்ணன் தனபாலுக்கு கோவை சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017ஆம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது மரணமும் சந்தேகத்தை எழுப்பியது.
இந்நிலையில் நேற்று(செப்டம்பர் 5) செய்தியாளர்களிடம் பேசிய கனகராஜின் அண்ணன் தனபால், “இந்த வழக்கு குறித்து கனகராஜ் என்னிடம் கூறிய அனைத்து உண்மைகளையும் வாக்குமூலமாக அளிக்கத் தயாராக உள்ளேன்.
எனது தம்பியை மூளை சலவை செய்து, ரூ.25 கோடி கொடுப்பதாக கூறி இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். கொள்ளையடிப்பதற்காக பேசப்பட்ட பணத்தை கேட்கும் போது தம்பியை அடித்தனர்.
இளங்கோவன், எடப்பாடி பழனிசாமியின் விசுவாசியான இரண்டு போலீசார் என் தம்பியை அடித்திருக்கின்றனர். அதன் பிறகுதான் தம்பி இறந்தார். அவர் விபத்தில் தான் இறந்தார் என்று ஒத்துக்கொள்ள முடியாது.
கொடநாடு வழக்கை பற்றி கேட்டாலே ஏன் எடப்பாடி பழனிசாமி நடுங்குகிறார்.
இந்த கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, இளங்கோவன், வெங்கடேஷன் ஆகியோர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கீழ் 30, 35 பேர் செயல்பட்டனர். திட்டமிட்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
சிபிசிஐடி விசாரித்தால் எல்லாம் சொல்வேன். ஐஜி சுதாகர் தலைமையிலான விசாரணை சரியில்லை. அதனால் இந்த விஷயத்தை இதுவரை சொல்லவில்லை.
கொடநாட்டில் இருந்து எடுக்கப்பட்ட 5 பைகளிலும்தான் அனைத்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஆவணங்கள் உள்ளன.
இந்த ஆவணங்களை வைத்துதான் எடப்பாடி கட்சியை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார். அவரை மீறி முன்னாள் அமைச்சர்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறினார்.
இந்நிலையில் கோயமுத்தூர் குற்ற புலனாய்வு துறை தனபாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அதில், “நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் காவல் நிலைய குற்ற எண் 158/2017, 324, 342, 449, 396 PC Q 120(3), 147, 148, 143, 447, 449, 458, 324 342 395 the 397, 386 & 302 rhe 120(B) 201, 204, 212, 404 IPC வழக்கில் கோவை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சிறப்பு புலனாய்வு குழுவால் தொடர் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக தங்களிடம் விசாரணை வேண்டியுள்ளதால் தாங்கள் வருகின்ற 14.09.2023ம் தேதி காலை 10.00மணிக்கு கோவை பாலசுந்தரம் ரோடு காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் (மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) உள்ள குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத்துறையின் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் (SIT, CBCID)கீழ் கையொப்பமிட்டுள்ள அதிகாரி முன்பு தவறாது ஆஜராக வேண்டும்” என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரியா
சிறப்புக் கூட்டத்தொடர்: மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!
“இந்தியா என்றால் அடிமை” : கங்கனா ரணாவத்