கொடநாடு கொலை வழக்கு : யார் சொல்வது உண்மை?

அரசியல்

கொடநாடு வழக்கில் இதுவரை எதுவுமே கிடைக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி நேற்று கூறியிருந்த நிலையில் இன்று தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது சிபிசிஐடி.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது ஓய்வு எடுத்து வந்த கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு காவலர் ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து பங்களாவிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தின் போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்ததால் பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டது.

கொடநாடு கொலை, கொள்ளை மட்டுமல்லாமல் இவ்வழக்கில் முக்கிய நபராக செயல்பட்டவர் என்று கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார்.

மற்றொரு நபரான சயான் விபத்து ஒன்றில் சிக்கினார். கேரளாவில் நடந்த விபத்தில் சயானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் இறந்தனர்.

கொடநாடு எஸ்டேட்டில் சி.சி.டி.வி கேமராவை கண்காணித்து வந்த நடுஹட்டியை சேர்ந்த தினேஷ்குமார் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபோன்று சினிமாவை மிஞ்சும் வகையிலான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்த நிலையில், 2019ஆம் ஆண்டு தெகல்ஹா முன்னாள் ஆசிரியரான மேத்யூ சாமுவேல் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ஆட்சி மாறி திமுக அரசு வந்த நிலையில் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தபடி கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள்.

நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று விசாரணை தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதை கடுமையாக எதிர்த்து எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார்.
ஆனாலும் விசாரணை தொடர்ந்தது. ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர் விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி,

அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டவர்களிடம் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், மூடி மறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யக் கூடாது” என்று அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதிட்டார்.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கொடநாடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசு. ஆனால் அவர்களை வெளியில் எடுத்தது திமுகவினர் தான்.

இவ்வழக்கில் உள்ளவர்கள் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கொடும் குற்றவாளிகள்.

அதிமுகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவே வேண்டுமென்றே திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த வழக்கில் இதுவரை எதுவும் கிடைக்காததால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. காலம் கடத்துவதற்காகவே இவ்வாறு செய்துள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.

அதேசமயத்தில், சேலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று, சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் உத்தரவின் பேரில், 2 கூடுதல் டிஎஸ்பிக்கள், 3 டிஎஸ்பிக்கள், அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரிகள் தரப்பிலும், அரசு வழக்கறிஞரும் பல முக்கியத் தகவல்கள் இந்த வழக்கில் கிடைத்துள்ளதாக கூறும் நிலையில், எடப்பாடி பழனிசாமி எதுவுமே கிடைக்கவில்லை என்கிறார்.

எனவே, சிபிசிஐடி விசாரணையின் முடிவில் தான் யார் சொல்வது உண்மை என்பது தெரியவரும்.

பிரியா

கனிமொழிக்கு பதவி: அறிவித்த 10 நிமிடத்தில் போஸ்டர்கள்

திமுக பொதுக்குழுவில் தீர்மானங்களே இல்லையே… ஏன்? 

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *