கொடநாடு கொலை வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தமிழ்நாடு முழுதும் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் -டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தேனியில் இணைந்து இன்று (ஆகஸ்டு 1) ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “நாங்கள் இணைந்தது இயற்கையாக நடந்திருக்கிறது. நாங்கள் பதவிக்காக இணையவில்லை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கண்ட சின்னத்தை இன்று துரோகத்தால் சிலர் அபகரித்திருக்கிறார்கள். அதை மீட்டெடுத்து அம்மாவின் தொண்டர்களாகிய உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை இந்த அரசு உடனே கைது செய்யவேண்டும், தமிழ்நாடு போலீஸ் என்பது ஸ்காட்லாண்ட் போலீஸுக்கு இணையானது. அந்த கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். இதை வலியுறுத்திதான் இந்த ஆர்பாட்டம் நடக்கிறது. கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது எல்லாருக்கும் தெரியும். கொடநாடு வழக்கு குறித்து ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு?” என்று கேள்வி எழுப்பினார் டிடிவி தினகரன்.
அடுத்து ஓபிஎஸ் பேசும்போது, ‘கொடநாடு கொள்ளைக் கூட்டத்துக்கும் கொலையாளிகளுக்கும் உரிய தண்டனையை தமிழ்நாடு பெற்றுத் தர வேண்டும். இதற்காகத்தான் இந்த ஆர்பாட்டத்தைத் தமிழ்நாடு முழுதும் நடத்துகிறோம். இதற்காக நம்மோடு இணைந்திருக்கும் அண்ணன் தினகரனுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின், ‘நான் முதல்வரானால் 3 மாதத்துக்குள் கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து தண்டிப்பேன் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார். ஆனால் இன்று முப்பது மாதங்கள் ஆகிவிட்டது.
ஆனால் அந்த வழக்கு இன்னமும் ஆமைவேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. கொடநாடு கொலையாளிகள் யார் என்பதை இந்த நாட்டுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அன்று இரவு கொடநாடு பங்களாவில் மின்சாரத்தைத் துண்டித்தது யார்? துண்டிக்கச் சொல்லி உத்தரவிட்டது யார்? இந்த கேள்விகளை அதிமுக, அமமுகவின் தொண்டர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கொடநாடு வழக்கில் இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆர்பாட்டம் அதிமுகவும், அமமுகவும் இணைந்து மக்கள் போராட்டமாக வெடிக்கும். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், மக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில்தான் நீதி கேட்டு இந்த ஆர்பாட்டத்தை நடத்துகிறோம்” என்று சொல்லி ஓபிஎஸ் முழக்கங்களை முன் வைத்தார்.
”விடியா அரசே விடியா அரசே கொடுத்த வாக்கு என்னாச்சு? கொடநாடு வழக்கு என்ன ஆச்சு? இந்தா அந்தானு சொல்லி சொல்லி… இரண்டரை வருடம் கடந்தாச்சு… இது நீதி கேட்கும் ஆர்ப்பாட்டம், நியாயம் கேட்கும் ஆர்பாட்டம். கொள்ளையடிக்கத் தூண்டியது யார்? கொலை, கொள்ளை செய்தது யார்? அம்புகளை வைத்து வழக்கை முடிக்க நினைக்காதே… ” என்றெல்லாம் முழக்கங்களை ஓபிஎஸ் முன் வைக்க அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரும் மீண்டும் முழங்கினர்.
-வேந்தன்
’இந்தியாவில் வாழ விரும்பினால், மோடி, யோகிக்கு வாக்களியுங்கள்’: ஆர்பிஎஃப் வீரரின் வீடியோ வைரல்!
’தென்பாண்டி சீமையிலே’ மெட்டில் பாரதிராஜாவுக்கு கவி பாடிய வைரமுத்து