Kodanad to Madurai conference Stalin game start

டிஜிட்டல் திண்ணை: கொடநாடு டு மதுரை மாநாடு… ஸ்டாலின் கேம் ஸ்டார்ட்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் தேனியில் ஓபிஎஸ்-டிடிவி இணைந்து நடத்திய ஆர்ப்பாட்ட காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“சில வாரங்களுக்கு முன் முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் இல்லத் திருமணத்தில் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் சந்தித்துக் கொண்டனர். அன்று முதல் இருவரும் இணைந்து செயல்பட இருப்பதாக இருவருமே அறிவித்தனர். அதன் பின் இரு தரப்பினரும் பல்வேறு ஆலோசனைகள் நடத்தியதில்… அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருவரும் அரசியல் கள ரீதியாக இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களை வகுத்தனர்.

அதன் முதல் கட்டமாகத்தான் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையை விரைவாக முடித்து உண்மைக் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு ஆகஸ்டு 1 தமிழகம் முழுதும் ஓபிஎஸ்-டிடிவி இணைந்து ஆர்ப்பாட்டம் ்நடத்தினர்

தமிழ்நாடு முழுதும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், அமமுகவினரும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்திய அதே வேளை… தேனியில் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் ஒரே மேடையில் பங்கேற்று கொடநாடு வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை தருமாறு கோஷங்கள் எழுப்பினர்.

கொடநாடு என்றாலே இவர்கள் இருவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைதான் குறி வைக்கிறார்கள் என்று அதிமுகவில் அனைவருக்கும் தெரியும்.

2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் அப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின், ‘திமுக ஆட்சிக்கு வந்தால் 90 நாட்களுக்குள் கொடநாடு வழக்கை விசாரித்து உண்மைக் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்து சிறையில் தள்ளுவோம்’ என்று எடப்பாடிக்கு எதிராக பிரசாரம் செய்தார். அதை சுட்டிக் காட்டிதான் இன்று தேனியில் ஓபிஎஸ்-சும், டிடிவி தினகரனும் பேசினார்கள்.

தேனியில் ஆர்ப்பாட்டம் எப்படி நடக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் போன் செய்து விசாரித்திருக்கிறார்.

‘தமிழ்நாடு போலீஸின் முழு ஒத்துழைப்பு இருப்பதாகவும் தேனியில் மட்டும் சுமாரான கூட்டம் கூடியதாகவும் உதயகுமார் எடப்பாடியிடம் தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுதும் அரசுக்கு கிடைத்த ரிப்போர்ட் படி மொத்தம் 30 ஆயிரம் பேர் இந்த ஆர்பாட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள், அதில் 10 ஆயிரம் பேர் பெண்கள்.

ஆர்ப்பாட்டம் முடிந்த கையோடே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘திமுகவின் பி டீமாக இருவரும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். நாடகம் போட அவர்களுக்கு கிடைத்த சப்ஜெக்ட் தான் கொடநாடு விவகாரம்’ என்று குற்றம் சாட்டினார்.

தேனி உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்த ஆர்பாட்டங்களுக்கு தமிழ்நாடு போலீஸின் முழு ஒத்துழைப்பு கிடைத்திருக்கிறது.

தென் மாவட்ட அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘ஆகஸ்டு 20 ஆம் தேதி மதுரை மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறார். இதற்காக மாவட்டங்கள் தோறும் ஆலோசனைக் கூட்டங்களைக் கூட்டி வருகிறார். மதுரை மாநாட்டுக்கான கூட்டத்தின் பெரும்பகுதியை தென்மாவட்டங்களில் இருந்தே கூட்டத் திட்டமிட்டுள்ளார் எடப்பாடி. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்தான் ஆகஸ்டு 1 ஆம் தேதி ஓபிஎஸ்-டிடிவி இருவரையும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியதன் மூலம்… மதுரை மாநாட்டுக்கு முக்குலத்து சமுதாயத்தினர் கலந்துகொள்வதை பெருமளவில் தடுக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் இலக்கு. இதே இலக்குதான் ஓபிஎஸ்-டிடிவி இருவருக்கும். இந்த சூழலில்தான் இவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு திமுக அரசின் போலீஸ் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது

மதுரை மாநாட்டுக்கு அதிமுகவைச் சேர்ந்த முக்குலத்து மக்கள் செல்லக் கூடாது என்று தென் மாவட்டங்களில் அந்த சமுதாய அமைப்புகள் தீவிரமாக களமிறங்கி வேலை பார்த்து வருகின்றன. ஜூலை 28ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட மாநாட்டு ஆலோசனைக் கூட்டத்துக்கு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும், துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதனும் சென்றபோது பரமக்குடி அருகே காஃபி சாப்பிட ஒரு கபேவில் வண்டியை நிறுத்தியிருக்கிறார்கள்.

அப்போது மாவட்ட நிர்வாகிகளும் அவர்களுடன் சென்றுள்ளனர். அந்த கடையில் வேலை செய்த ஓர் ஊழியர் அதிமுகவைச் சேர்ந்தவர். அவர், ‘என்னண்னே… 10.5 % இட ஒதுக்கீடு கொடுத்து எங்களை ஸ்பாயில் பண்ணிட்டு இப்ப மாநாட்டுக்கு கூப்பிட வர்றீங்க? மாநாட்டுக்கு போகக் கூடாதுனு சங்கத்துல சொல்லியிருக்காங்கண்ணே’ என்று மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்ல… தலைமைக் கழக நிர்வாகிகள் காதுபடவே கேட்டிருக்கிறார்.

இதேபோன்ற குரல்கள் ஆய்வுக் கூட்டங்களிலும் எதிரொலித்திருக்கின்றன. இந்த சூழலை ஓபிஎஸ்-டிடிவி கூட்டணி மூலம் மேலும் வலிமைப்படுத்தி மதுரை மாநாட்டுக்கு தென்மாவட்டங்களில் இருந்து பெரும் கூட்டம் கூடுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் திட்டம்.

அதை செயல்படுத்தும் விதமாகத்தான் ஆகஸ்டு 20 மாநாடு என்ற நிலையில் ஆகஸ்டு 1 ஆம் தேதி இந்த கொடநாடு ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. அடுத்தடுத்து ஓபிஎஸ்-டிடிவி கூட்டணி தொடர் நிகழ்வுகளை நடத்தி மதுரை மாநாட்டில் தென் மாவட்டங்களில் இருந்து அதிமுகவின் வழக்கமான ஸ்ட்ரெங்த் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்’ என்கிறார்கள்.

இதுபற்றி அறிந்த எடப்பாடி பழனிசாமியும் மதுரை மாநாட்டுக்கு தென் மாவட்டத்தில் இருந்து எழுந்திருக்கும் நெருக்கடி பற்றி நிர்வாகிகளுடன் விவாதித்துள்ளார்.

அதையடுத்து அதிமுகவின் ஒவ்வொரு நிர்வாகியும் குடும்பத்தினரோடு மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் -டிடிவி கூட்டணி மூலம் திமுக ஏற்படுத்தும் இந்த சேதாரத்தை எதிர்கொள்ள வட மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இருந்து கூடுதல் கூட்டத்தைத் திரட்டும் வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறார் எடப்பாடி. இதுபற்றி ஆகஸ்டு 4 அதிமுக மாசெக்கள் கூட்டத்தில் பேசுவார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

நாளை இந்தியா கூட்டணி : இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்த அமித்ஷா

இரண்டு ரவுடிகள் என்கவுன்டர்: டிஜிபி விளக்கம்!

+1
1
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *