வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாவில் ஒரு படம் வந்து விழுந்தது. அதில் சிபிசிஐடி ஐஜி தேன்மொழி என்று கேப்ஷனும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து வாட்ஸ் அப் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“கொடநாடு எஸ்டேட்டில் 2017 இல் நடந்த கொலை, கொள்ளை வழக்கு அண்மையில் தனிப்படை போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்திலேயே கிட்டத்தட்ட வழக்கு விசாரணையை முடித்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில் 2021 இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
கொடநாடு வழக்கை விசாரிக்க சுதாகர் ஐபிஎஸ் இடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு மேற்கு மண்டல ஐஜி யாக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் விசாரணை விறுவிறுப்பாக சென்றது.
2021 ஆகஸ்ட் 17 ஆம் தேதி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், ஐஜி சுதாகர், மற்றும் டிஐஜி, எஸ்.பி, டி.எஸ்.பி. ஆகியோர் கொடநாடு எஸ்டேட் சென்று பங்களாவுக்குள்ளேயும், சம்பவம் நடந்த இடம் அனைத்தையும் சுற்றி பார்த்தவர்கள், கொடநாடு மேனேஜர் நடராஜன் மற்றும் அங்கிருந்த பணியாளர்களிடம் விசாரித்தார்கள். விவேக் மற்றும் சசிகலாவிடமும் விசாரணை செய்தார்கள்.
ஒரு கட்டத்தில் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் ஐஜி சுதாகர் மீது மேலிடத்துக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. அதை வலுப்படுத்தும் வகையில் கொடநாடு வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தும் பொறுப்பு ஐஜி தேன்மொழியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஐஜி தேன்மொழி 2002 பேட்ஜ் திண்டுக்கல் மாவட்டம் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரிடம் 66 மாதங்களுக்குப் பிறகு கொடநாடு வழக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. விசாரணை தொடர்பாக அவருக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் சிபிசிஐடி வட்டாரத்தில்.
பொறுப்பை ஏற்றதிலிருந்து வழக்கு சம்பந்தமான விசாரணை கட்டுகளை அலசி ஆராய்ந்து வருகிறாராம் தேன்மொழி. இந்த வழக்கில் கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், சசிகலா, விவேக் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருக்கும் ஐஜி தேன்மொழி,
கொடநாடு சம்பவம் நடந்தபோது பொறுப்பில் இருந்த அப்போதைய எஸ்.பி ரம்பா முரளி, தற்போது ஓய்வு பெற்றுள்ள ஐஜி பாரி ஆகியோரிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளாராம். அதுமட்டுமல்ல, அதிமுகவின் தற்போதைய இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தவும் ஐஜி தேன்மொழி தயாராகிறார் என்கிறார்கள் சிபிசிஐடி வட்டாரங்களில்.
ஏற்கனவே பன்னீர் தரப்பினர் கொடநாடு வழக்கில் உண்மைக் குற்றவாளியை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் புதிய விசாரணை அதிகாரியான ஐஜி தேன்மொழிக்கு எடப்பாடி பழனிசாமியை விசாரணை செய்வதே புதிய அசைன்மென்ட்டாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
கொடநாடு வழக்கு விசாரணையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து எடப்பாடியும் தனது நெருக்கமான வட்டாரத்தில் பேசும்போது, ‘அதெல்லாம் பாத்துக்கலாம்’ என்று அலட்டிக் கொள்ளாமல் கமென்ட் அடித்திருக்கிறார் என்கின்றனர் சேலத்து அரசியல் வட்டாரத்தினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
”என்னை யாரும் திரும்பப் பெறக் கேட்கவில்லை”-ஆளுநர் இல. கணேசன்
தமுமுக-மமக தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு!