”உண்மை தெரிந்து பேசுங்க” : ஆளுநருக்கு ப.சிதம்பரம் அட்வைஸ்!

Published On:

| By christopher

"Know the real situation and speak" : P. Chidambaram's advice to the governor rn ravi

உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி பேசுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று (அக்டோபர் 19) அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள டிடி தொலைக்காட்சி நிலையத்தில் நேற்று ‘இந்தி மாதம்’ கொண்டாட்டத்தின் நிறைவு விழா நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரி பாடப்படாதாது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அவர் பேசும்போது,  “இந்தியாவில் தமிழ்நாடு தவிர்த்து மற்ற 27 மாநிலங்களிலும் அம்மாநில தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் ஒன்று என மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. தமிழ்நாடு மட்டும் அதனை புறக்கணிக்கிறது. மற்ற மாநிலங்களுடன் தொடர்பு கொள்வதை தமிழ்நாடு விரும்பவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆளுநர் ரவியின் இந்த பேச்சு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வட இந்திய மாநிலங்களில் ‘ஒரு மொழித் திட்டம்’ தான் உள்ளது!

இந்த நிலையில் ஆளுநரின் பேச்சில் எந்தவித உண்மையும் இல்லை என்றும், உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் 28 மாநிலங்களில் 27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப் படுவதாக ஆளுநர் கூறியிருக்கிறார்.

அவர் கற்பனை உலகத்தில் இருக்கிறார் என்று பணிவுடன் சொல்ல விரும்புகிறேன்

பல இந்தி பேசும் மாநிலங்களில் குறிப்பாக பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட் — பல அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை, ஆங்கில வகுப்புகளை நடத்துவதில்லை, அப்படி நடந்தாலும் வகுப்புகளில் மொழிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

பல்லாயிரம் ‘ஆங்கிலம் கற்ற’ மாணாக்கர்கள் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் பேச அல்லது எழுத இயலாதவர்கள் என்பதை நான் நேரடியாக அறிவேன்

அங்கு மும்மொழித் திட்டம் செயல்பாட்டில் இல்லை. ஆழமாகப் பார்த்தால், அங்கு ‘ஒரு மொழித் திட்டம்’ தான் செயல்படுத்தப்படுகிறது.

இரண்டாவது மொழி என்ற பெயரில் இந்தி மொழிக்கு நெருங்கிய தொடர்புள்ள சமஸ்கிருதம், பஞ்சாபி, போஜ்புரி போன்ற மொழிகள் ஒப்புக்காக ‘கற்பிக்கப்படுகிறது’.

தென் மாநில மொழிகள் — தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் — 95 சதவீதப் பள்ளிகளில் கற்றுத்தரப்படுவதில்லை, அதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை என்பதே உண்மை.

தமிழ் நாட்டில் மாநில அரசுப் பள்ளிகளைத் தவிர தனியார் பள்ளிகள், CBSE, ICSE பள்ளிகள் மற்றும் மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலாயா பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்த செய்தி.

தமிழ்நாட்டில் இந்தி மொழியைக் கற்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தடையும் கிடையாது.

தட்சிண பாரத இந்தி பிரசார சபையின் பல நிலைத் தேர்வுகளை ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் பல்லாயிரம் மாணவர்கள் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி.

ஆளுநர் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

Maharashtra Elections: தொகுதி பங்கீட்டை உறுதி செய்த அமித் ஷா… சண்டை போடும் எதிர்க்கட்சி கூட்டணி!

”வந்து விளையாடிட்டு ஒரே நாள்ள போயிடுங்க” : பாகிஸ்தான் ஐடியா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share