திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று (ஜனவரி 18) சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று (ஜனவரி 18) காலை 50 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் பேசிய திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, “2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்பதற்கு முன்னுரிமையாக இந்த மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது வழக்கறிஞர் இல்லாமல் வேட்புமனுவை முன்மொழிய முடியாது, வழிமொழிய முடியாது.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வழக்கறிஞர் இருந்தால்தான் காலை முதல் மாலை வரை சரியாக வாக்குப்பதிவு நடக்கும்.
பொதுவாக ஒரு ஆட்சியில் இருந்து ஒரு ஆட்சி மாறும் போது திமுகவினர் மீதும், முன்னோடி பெருமக்கள் மீதும் வழக்கு வருகிறது. எனவே தேர்தலில் போட்டியிட வேண்டும், பொது வாழ்வில் தொடர வேண்டும் என்றால் வழக்கறிஞர்கள் இல்லாமல் அதுமுடியாது என்ற நிலை வந்துள்ளது.
சிறையில் அடைக்கப்படும் போது, கட்சியினரோ உறவினர்களோ சந்திக்க வரும் போது அவர்களுக்கு கட்டுப்பாடுகள் உண்டு. வழக்கறிஞர்கள் மட்டும் தினமும் சந்திக்கலாம் என்ற சிறப்பும் இன்று உள்ளது.
முக்கியமாக ஒரு அரசியல் கட்சி ஆட்சி நடத்த வேண்டும், நீதிபரிபாலனம் செய்ய வேண்டும், நியாயம் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் தொடர்ந்து வழக்கறிஞர்கள் இருக்க வேண்டும். சிறந்த வழக்கறிஞர்களாக இருக்க வேண்டும்.
திமுகவில் இருக்கக் கூடிய வழக்கறிஞர்கள் மிக சிறப்பாக கையாண்டு இந்த கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்து பெரும் பங்கு வகிக்கின்றனர்.
ஒரு காலத்தில் உயர்நீதிமன்றத்தில், பொதுப்படையாக இருந்தாலும் கூட நம்மை சார்ந்த, நம் கொள்கைச் சார்ந்த நீதிபதிகள் இருந்தார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. நிறைய கல்லூரிகள் வந்துவிட்டன. நிறைய வழக்கறிஞர்கள் படித்துவிட்டு வருகிறார்கள். நிறைய வழக்குகளும் வருகிறது.
இனி வழக்கறிஞர்களின் அடுத்தக்கட்டம் என்னவாக இருக்க வேண்டுமென்றால் இனி நீதி பரிபாலனத்தில் வழக்கறிஞர்கள் வழக்காடுவது மட்டுமல்ல நீதி சொல்கிற இடத்தில் நீங்களோ உங்களது பிள்ளைகளோ வர வேண்டும்.
அப்படியானால் இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகாலம் தொடரும்” என்று வழக்கறிஞர்களுக்கு வாழ்த்து கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
கமல்ஹாசனுடன் நடித்தும், முத்தக்காட்சி இல்லையா? – யார் அந்த நடிகை
முதல்வர் மீதான வழக்கில் ரூ.300 கோடி முடக்கம் : அமலாக்கத்துறை அதிரடி!