அம்மா உணவகத்திற்கு இந்த நிதியாண்டில் ரூ.129.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீதான விவாதம் இன்று (மார்ச் 30) சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, “அம்மா உணவகங்களில் தரமான சுவையான உணவுகள் வழங்கப்படவில்லை. அம்மா உணவகத்தை மூட உத்தரவிட மாட்டோம் என்று திமுக அரசு தெரிவித்தாலும், கடந்த மூன்று நிதிநிலை அறிக்கைகளிலும் அம்மா உணவகத்திற்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லை” என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “தமிழகத்தின் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை. இதனை அரசியலாக்குவதற்காக தேவையில்லாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். இந்த ஆண்டு அம்மா உணவகத்திற்கு மட்டும் ரூ.129.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “குறிப்பிட்ட அம்மா உணவகங்களில் உணவு தரமாக இல்லை என்று தொடர்ச்சியாக புகார் வருகிறது” என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அம்மா உணவகத்தில் உணவு தரமாக வழங்கப்படவில்லை என்று யார் கூறியது. எந்த இடத்தில் இதுபோன்று நடக்கிறது என்று ஆதாரத்துடன் தெரிவித்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
வைக்கம் நூற்றாண்டு விழா: முக்கிய அறிவிப்புகள்!