இருதரப்பு ஆதரவாளர்கள் இடையேயான மோதலைத்தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு, திருச்சி சிவாவை இன்று (மார்ச் 17) அவரது இல்லத்திலேயே நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார்.
திருச்சி சிவா எம்.பி, அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் இடையே நேற்று முன்தினம் காவல்நிலையம் வரை நீடித்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள இல்லத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை நேரில் சென்று இன்று சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு.
இருவரும் சில நிமிடங்கள் ஒன்றாக அமர்ந்து பேசிய நிலையில் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கே.என்.நேரு பேசுகையில், ”புதிய இறகுபந்து அரங்கை திறந்து வைக்க வேண்டுமென்று என்னிடம் சொன்னார்கள். எந்த இடத்தில் அமைந்திருக்கிறது என்று எனக்கு தெரியாது. எனது தொகுதி என்று தான் அதனை திறந்து வைக்க வந்தேன்.
அப்படி வரும்போது, வழியில் ஒரு சிலர், ’எங்களது அண்ணன் பெயரை அழைப்பிதழில் போடாமல் எப்படி வரலாம்? என்று கேட்டார்கள். அதற்கு, ‘நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை போய் பாருங்கள். அதற்கு நான் என்ன செய்வேன்? என்று கூறி அங்கிருந்து கிளம்பிட்டேன்.
என்னுடைய துரதிர்ஷ்டம் என்னவென்றால், எனக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர்களை போலீசார் பெரிய வேனில் ஏற்றி அழைத்து சென்றுள்ளார்கள். எனக்கு பின்னாடி அந்த வேன் இருந்ததால் அவர்களை கைது செய்தது தெரியாது.
அதற்கு பிறகு நடக்ககூடாத விஷயங்கள் நடந்துவிட்டது. அதுவும் கழக குடும்பத்தில் இருக்க கூடியவரின் ஒருவரின் வீட்டில் நடந்துவிட்டது.
டென்னிஸ் அரங்கை திறந்து வைத்து விட்டு தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நேரடியாக சென்றுவிட்டேன். அப்போது தான் என்னிடம் காவல்நிலையத்தில் தாக்குதல் நடைபெற்றதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள்.
இந்த விரும்பதகாத சம்பவம் தகவல் பரிமாற்றத்தில் நடந்த குளறுபடியால் நடந்துவிட்டது. இனி இதுபோல் நடைபெறாது.” என்று தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
பின்னர் “இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் என்னிடம், ’இருவருமே திருச்சி மாநகரில் கழகத்தை கட்டி காப்பாற்றி வருகிறீர்கள். உங்களுக்குள் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது. நாடாளுமன்றத்தில் தனது பணியை சிறப்பாக செய்து வரும் திருச்சி சிவாவை நீங்கள் நேரே சென்று சந்தித்து பேச வேண்டும்.
உங்களிடையே பிரச்சனை இல்லை என்று நாட்டுமக்களிடம் தெரிவித்துவிட்டால், கழகத்திற்கும், ஆட்சிக்கும் நல்லப்பெயர் வருமென்று சொன்னார்.
எனவே நானும் இப்போது நேரில் சிவாவை சந்தித்து. ‘எதையும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். எனக்கு தெரிந்திருந்தால் இதை அனுமதித்திருக்க மாட்டேன். இனி இதுமாதிரியான சம்பவம் நடக்காது. நடக்ககூடாது” என்று மனதில் உள்ளதை கூறிவிட்டேன்” என்று தெரிவித்தார்.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்
தொடர்ந்து திருச்சி சிவா எம்.பி. பேசுகையில், “ நடந்தது நடந்ததாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற தலைவரின் குரல் எங்கள் செவியில் ஒலித்து கொண்டிருக்கிறது.
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு இந்த நாட்டை வழிநடத்தி கொண்டிருக்கிறார். அவருடைய மனம் சங்கடப்பட கூடிய வகையில் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையோடு இருக்கின்றோம்.
அவர் எடுத்துக்கொண்ட முயற்சியால் நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டோம். நடந்த சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்று நேரு என்னிடம் கூறினார். நான் அதை கேட்டுக்கொண்டேன்.
நான் முதலில் சொன்னது போல் இயக்கத்தின் வளர்ச்சி ரொம்ப முக்கியம். அவர் செய்கிற வேலையை என்னால் செய்ய முடியாது. நான் செய்கின்ற வேலைகளை அவர்கள் வரவேற்கிறார்கள். அது வேறுவிதமான பணி. ஆக பலதரப்பட்டவர்கள் இணைந்து பணியாற்றுகிற இந்த கழகத்தில் வரும் நாட்களில் வளர்ச்சிக்காகவே எங்களது செயல்பாடுகள் இருக்கும். நடந்தது நடந்ததாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் பெயரில் புதிய கேலரி
டிஜிட்டல் திண்ணை: பன்னீர் அணி- பாஜக கூட்டணி… எடப்பாடிக்கு வந்த டெல்லி மெசேஜ்!