தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு, தான் அணிந்திருந்த கருங்காலி மாலையை சக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு போட்டுவிட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் கருங்காலி மாலை தான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன் அணிந்திருப்பதும் இளைஞர்களை அதன் பக்கம் கவர்ந்துள்ளது.
இந்த கருங்காலி மாலை அணிந்தால் செல்வம் குவியும், வாய்ப்புகள் பெருகும், தொழில்வளம் பெருகும். நல்லது மட்டுமே நடக்கும் என சிலர் கூறி வருகின்றனர்.
ஆனால் இது எதுவுமே உண்மையில்லை என்றும், எல்லாமே கட்டுகதை என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இதனால் இன்றைக்கு சமூக வலைதளங்களில் கன்டென்ட் ஆகும் முக்கியமான மீம் மெட்டீரியலாக கருங்காலி மாலை மாறியுள்ளது.
இந்த நிலையில் தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு, தான் அணிந்திருந்த கருங்காலி மாலையை சக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு போட்டுவிட்டது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை தி.நகரிலுள்ள பிரபல தனியார் ஹோட்டலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில்திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தி.மு.க இளைஞரணியின் மாநில மாநாடு, நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் கே.என்.நேருவிடம், அவர் போட்டிருந்த கருங்காலி மாலை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி கேட்டிருக்கிறார்.
உடனே தான் அணிந்திருந்த வெள்ளி கருங்காலி மாலையை ஐ.பெரியசாமி கழுத்தில் போட்டுவிட்டார் நேரு. வேண்டாமென்று அதை திருப்பிக்கொடுக்க ஐ.பெரியசாமி முயன்றபோது, ’உங்களுக்கு தான் அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது. நீங்களே போட்டுக்குங்க’ என்று நேரு கூறியுள்ளார்.
ஏற்கெனவே சமூகவலதளங்களில் கருங்காலி மாலை விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், தற்போது மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் திமுக அமைச்சர்களே அதனை பயன்படுத்தி வருவது மக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உதயநிதி