கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று டிசம்பர் 2ஆம் தேதி நகரப்புற வளர்ச்சித்துறையின் ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார் அமைச்சர் கே.என்.நேரு. கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களின் நிலை என்ன, எப்போது முடிப்பது என்பது பற்றிய விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வெ.கணேசன், கடலூர் எம்பி ரமேஷ், கடலூர் எம்.எல்.ஏ ஐய்யப்பன், நெய்வேலி எம்.எல்.ஏ சபா இராசேந்திரன், விருத்தாசலம் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன் ஆகிய மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலர் சிவதாஸ் மீனா ஐஏஎஸ், கலெக்டர் பாலசுப்பிரமணியன், எஸ்பி சக்திகணேசன் ஆகிய முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாநகர கவுன்சிலர்கள், ஆணையர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகன், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புவனகிரி தொகுதி அருண்மொழித்தேவன், சிதம்பரம் தொகுதி பாண்டியன் ஆகியோர் புறக்கணித்தனர்.
கூட்டம் தொடங்கியதும், ‘முதலில் சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி… உங்க குறைகளையும் தேவையும் சொல்லுங்க’ என்று மேடையில் இருந்து சொல்லப்பட்டதும் அந்த பேரூராட்சியின் தலைவர் பழனி எழுந்து பேசினார். அப்போது அமைச்சர் நேரு, ‘உங்கள் பேரூராட்சியில் வரி வசூல் எவ்வளவு செய்தீர்கள்? வரி பாக்கி எவ்வளவு இருக்கிறது?’ என்று கேட்டார். வரி பாக்கியை அவர் அதிகமாகச் சொல்ல, ’முதலில் வரியை வசூல் செய்யுங்க. உங்கள் பேரூராட்சி அலுவலகம் கட்ட 2 கோடி நிதி ஒதுக்கியிருக்கு’ என்றார் அமைச்சர். அதற்கு நன்றி தெரிவித்த பேரூராட்சித் தலைவர், ‘
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பல கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்யவில்லை’ என்றார். அதற்கு பதிலளித்த துறைச் செயலாளர் ஐ ஏ எஸ் சிவதாஸ் மீனா, ’என்ன முறையோ அதன்படி வரியைப் போடுங்கள்’ என்று பதில் கொடுத்தார்.
அடுத்து கிள்ளை பேரூராட்சி அழைக்கப்பட்டதும், அந்த பேரூராட்சி துணைத் தலைவர் கிள்ளை ரவிந்திரன் தனது பேரூராட்சி பற்றிய புள்ளி விவரங்களை வாசித்தார். அதன் பின், ‘இலவச தனிநபர் கழிப்பிடம் கட்டுவதில் சிக்கல் இருக்குங்க’ என்று கூறினார். ‘என்ன சிக்கல்?’ என்று அமைச்சர் நேரு கேட்க,
’அரசு ஒதுக்கும் 9 ஆயிரம் ரூபாயில் தனி நபர் கழிவறை கட்டமுடியலை. ஆயிரம் செங்கல் பத்தாயிரம் ரூபா வருது. கொத்தனார் கூலி 900 ரூபாய், சித்தாள், சிமெண்ட், பேஷன் அப்படினு நிறைய செலவு இருக்கு. அதனால் 30 ஆயிரம் கொடுத்தால் சரியா இருக்கும். 9 ஆயிரம் ரூபாய்க்கு கழிவறை கட்ட பயனாளிகள் யாரும் முன்வர்றதில்லை’ என்று கிரவுண்ட் நிலவரத்தை எடுத்துக் கூறினார் கிள்ளை ரவீந்திரன்.
இதைக் கேட்ட அமைச்சர் நேரு, ‘யோவ், என்ன ஸ்டார் ஹோட்டல் அளவுக்கா கழிவறை கட்டித் தரமுடியும்?’ என சிரித்தவர், ‘சரி சரி முதல்வரிடம் பேசி 15 ஆயிரம் கிடைக்க ஏற்பாடு செய்யுறேன்’ என்றார். அடுத்தபடியாக கிள்ளை பேரூராட்சிக்கு பஸ் நிலையம் கேட்க, அதற்கும் ஒ. கே. சொல்லிவிட்டார் அமைச்சர்.
அடுத்தது மேல்பட்டாம்பாக்கம், பரங்கிப்பேட்டை உட்பட சில பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் கிளர்க்குகளை அனுப்பியிருந்தனர். அவர்கள் பதில் சொன்னதால் கோபமான அமைச்சர் நேரு, கூட்டத்திலிருந்த மாவட்ட துணை இயக்குநர் வெங்கடேசனிடம் திரும்பி இதுபற்றிக் கேட்டார். அவர் ஏதோ மழுப்பி பதில் சொன்னதும் டென்ஷனாகிவிட்டார் அமைச்சர் நேரு. ’என்னய்யா எது கேட்டாலும் இல்லை, தெரியலைனு சொல்றே. இ. ஒ. இல்லாமல் வரி எப்படிப் போடமுடியும்? வசூல் எப்படிச் செய்யமுடியும்? சின்ன வயசு ஆளா இருக்கே… நீ வேற எங்கேயாவது ட்ரான்ஸர் வாங்கிட்டு போயா’ என்றார் டென்ஷனாக.
அடுத்து வடலூர் பேரூராட்சி தலைவர், ’எங்கள் ஊர் பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்’ என கோரிக்கையை வைக்க, அருகில் இருந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை திரும்பிப் பார்த்தார் அமைச்சர் நேரு. ‘உங்க அமைச்சர் இடம் அங்க இருக்கே. அதில் பஸ் நிலையம் கட்டுய்யா’ என்றார் சிரித்துக் கொண்டே.
அடுத்து சிதம்பரம் நகராட்சி தலைவர் செந்தில் எழுந்தார். ‘சிதம்பரம் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தவேண்டும். சாக்கடைகளைத் தூர்வார ஆட்கள் இல்லை இரண்டே பேர்தான் இருக்கிறார்கள்’ என்று கோரிக்கைகளை முன் வைத்தார். ‘எல்லாத்தையும் உன் மாமா சொல்லிவிட்டான்’ என்ற நேரு அருகில் இருந்த செயலர் சிவதாஸ் மீனாவிடம். ‘அமைச்சர் எம்.ஆர்.கே.வோட அக்கா பையன்’ என்று செந்திலை அறிமுகம் செய்துவைத்தார். உடனே எம்.ஆர்.கே பன்னீர் மைக் பிடித்து, ’சிதம்பரம் சேர்மன் உங்கள் நகராட்சியில் வரி எவ்வளவு வசூல் செய்திருக்கீங்க?’ என்று கேட்க, உடனே அமைச்சர் நேரு மைக் பிடித்து, ’என்னய்யா… மாமனும் மச்சானும் ஒண்ணும் தெரியாதது போல பேசிக்கிறீங்க?’ என்றதும் கூட்டம் அரங்கில் இருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பு.
அடுத்து விருத்தாசலம் நகராட்சி தலைவர் (முன்னாள் எம்.எல்.ஏ குழந்தை தமிழரசன் மகள்) டாக்டர் சங்கவி பேசினார். பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அவருக்கு பதில் சொன்ன அமைச்சர் கே.என்.நேரு, ’ஏம்மா பேச்செல்லாம் நல்லாதான் பேசுற… ஆனா உன் நகராட்சியில் சுத்தமா வரி வசூல் செய்யவே இல்லையே?’ எனக் கேட்டவர், விருத்தாசலம் நகராட்சி ஆணையரை கூப்பிட்டு, ’என்ன வேலை செய்யறிங்க?’ என்று சத்தம்போட்டார்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பெண்ணாடம் பேரூராட்சி விசிக தலைவர் அமுதலட்சுமியை அழைத்துக்கொண்டு மேடை அருகில் மனு கொடுக்க வந்தார் பேரூராட்சி திமுக துணைத் தலைவர் குமரவேல். அதைப் பார்த்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மேடையை விட்டு தள்ளிப் போகுமாறு கையால் சைகை காட்டி தடுத்தார். மனு கொடுக்க வந்த தலைவரும் துணைத் தலைவரும் இருக்கைக்கு திரும்பிவிட்டனர். அவர்களைப் பார்த்த அமைச்சர் கணேசன் கண்களாலும் கைகளாலும் சைகைக் காட்டி பின் பக்கமாக வரச்சொன்னார். அவர்களும் மெதுவாக பின் பக்கமாக வந்தார்கள். அவர்களிடமிருந்த மனுவைப் பெற்று அமைச்சர் நேருவிடம் கொடுத்தார் அமைச்சர் கணேசன். அந்த காட்சியை இறுக்கமான முகத்துடன் திரும்பிப் பார்த்தார் எம்.ஆர்.கே. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்களுக்கும் எவ்வளவு இணக்கம் இருக்கிறது என்பதற்கு இந்த காட்சியே சான்றாக இருந்தது.
விசிக எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் பேசும்போது, “எனது தொகுதியில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் புகழ்பெற்ற பூவராகசாமி கோயில் இருக்கிறது. வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள் அவர்கள் தங்குவதற்கு ஓய்வு அறைகள் கட்ட நிதி ஒதுக்கவேண்டும்’ என்ற கோரிக்கையை வைத்தார், இதைக் கேட்ட நேரு, ‘அப்படியா சரி உங்க எம்.எல்.ஏ நிதியிலிருந்து பாதி கொடுங்கள்’ என்றதும், ’என் தொகுதி நிதி குறைவாக இருக்கிறது’ என்று மறுத்தார் சிந்தனைச் செல்வன். ‘சரி பார்க்கிறேன்’ என்றார் நேரு.
நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ சபா இராசேந்திரன் பேசுகையில், ‘வடலூர் நகராட்சி குப்பைகளை எனது தொகுதியில் உள்ள கிராமப் பகுதியில் கொட்டுகிறார்கள். எனவே குப்பை கொட்டுவதற்கென தனி இடம் ஏற்பாடு செய்யலாம். எனது சட்டமன்ற தொகுதியில் பேரூராட்சி, நகராட்சி என எதுவும் இல்லை. அதனால் வடகுத்து ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றலாம்’ என்று கோரிக்கை வைத்தார். அப்போது அமைச்சர் நேரு, ’சபா உனக்கு நெய்வேலி நகரியத்தையே நகராட்சியாக மாற்றி தருகிறேன்’ என்றதும், ’ரொம்ப நல்லது அண்ணா’ என்று நன்றி தெரிவித்தார் சபா இராசேந்திரன்.
அமைச்சர் கணேசன் பேசும்போது, அமைச்சர் கே.என் நேரு எழுந்து பாத்ரூம் போய் விட்டார். அமைச்சர் காதுகொடுத்துக் கேட்பார் என்று கத்திக் கத்தி பேசினால் பாத்ரூம் போய்விட்டாரே என நொந்துகொண்டார் அமைச்சர்.
காலை 9.45 மணிக்கு ஆரம்பித்த ஆய்வுக் கூட்டம் 11.30 வரை நீடித்தது. கடலூர் மாவட்டத்துக்கான நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த திருப்தியோடு பல்வேறு ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டு புறப்பட்டார் அமைச்சர் நேரு.
அதிகாரிகள் மீதான கறார், மக்கள் பிரதிநிதிகளின் நிதித் தேவைகளை சாமர்த்தியமாக பதிலளித்து சமாளித்தல், வரி வசூலித்தலில் கெடுபிடி, உறவு முறை சொல்லி கலாய்த்தல், கட்சிக்காரர்களிடம் வாய்யா போய்யா என்ற இயல்பான அன்பு என அமைச்சர் நேருவின் கூட்டம் சீரியசும் சிரிப்பும் கலந்து முடிந்தது.
–வணங்காமுடி
“அரசாணை வெளியிடாதது தவறில்லை” – அண்ணாமலைக்கு அமைச்சர் பதில்!