அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகையா? – கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்!
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று (நவம்பர் 13) காலை தெரிவித்திருந்த நிலையில், தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று விளக்கமளித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,
“1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கொஞ்சம் பேருக்கு வராமல் இருக்கும். இந்த பணம் வரும் ஜனவரிக்கு மேல் ரேஷன் கார்டுள்ள அத்தனை மகளிருக்கும் வழங்கப்படும். இப்போது பணம் யாருக்கெல்லாம் வராமல் இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் கொடுத்துவிடுவோம். இனி யாருக்கும் பணம் வரவில்லை என்ற பிரச்சினை இருக்காது” என்றார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தனது எக்ஸ் வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே அரசின் இலக்காகும்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மருத்துவர் பாலாஜிக்கு கத்திக்குத்து: “டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்” – மா.சுப்பிரமணியன்
ஜார்க்கண்ட், வயநாடு : எவ்வளவு வாக்குகள் பதிவானது?