வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விடுவிக்கப்பட்ட அமைச்சர் கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில் நவம்பர் 27-ஆம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெற உள்ளது.
2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலெட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் அனைவரையும் கடந்த ஜூலை 20-ஆம் தேதி விடுவித்து உத்தரவிட்டது. அமைச்சர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாததால் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தரப்பில், “தான் விடுவிக்கப்பட்ட ஒரு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க எந்த ஒரு அடிப்படை காரணமும் இல்லை. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றால் அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்க வேண்டும். அமைச்சர் என்பதால் உள்நோக்கத்துடன் மறு ஆய்வு செய்யக்கூடாது. பதில் மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதி ஜெயச்சந்திரன், “தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உத்தரவில் கூறப்பட்டுள்ள காரணங்களை அடிப்படையாக கொண்டு வாதிடுங்கள். இந்த வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 27-ஆம் தேதி முதல் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் முன்னாள் டிஜிபி பி.கே.ரவி
இசை நிறுவனத்தை தொடங்கும் வைஜெயந்தி மூவிஸ்!