திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடானது கடந்த ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திமுக கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இது முழுக்க முழுக்க அரசியல் சார்பற்ற மாநாடாகும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இந்து சமய அறநிலையத் துறை என்பது கோவில் சொத்துகளைப் பாதுகாப்பதும், வரவு – செலவுகளை சரி பார்ப்பதுமான துறையே தவிர, பக்தியைப் பரப்புவதற்கான ஒன்றல்ல என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று (ஆகஸ்ட் 27) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“அறநிலையத் துறை உருவாக்கப்பட்டதன் நோக்கம்!
இந்து அறநிலையத் துறை என்பது கோவில் பாதுகாப்பு, நிதி வரவு – செலவைப் பராமரிப்பதே. மதச்சார்புப் பிரச்சாரத்திற்கானதல்ல. தமிழில் வழிபாடு – கருவறையில் சமத்துவம் என்ற முதலமைச்சரின் கருத்து வரவேற்கத்தக்கதே.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ பழனியில் 24.8.2024 அன்று தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற்றுள்ளது.
காணொலிக் காட்சி வழியாக மாநாட்டைத் தொடங்கி வைத்து வாழ்த்தி உரையாற்றியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டதன் நோக்கம் இந்து அறநிலையத் துறை என்பது கோவில் சொத்துகளைப் பாதுகாப்பதும், வரவு – செலவுகளை சரி பார்ப்பதுமான துறையே தவிர, பக்தியைப் பரப்புவதற்கான ஒன்றல்ல.
அனைத்துலக முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் 8 மற்றும் 12 ஆவது தீர்மானங்கள் விமர்சனத்துக்கு உரியவையாகும்.
அரசின் கொள்கை மதச்சார்பின்மையே!
8 ஆவது தீர்மானம்: ‘‘கந்த சஷ்டி விழாக்காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோவில்களில் மாணவர், மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.’’
12 ஆவது தீர்மானம்: ‘‘முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின்கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.’’
இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? இந்து அறநிலையத் துறையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச் சார்புடையன அல்ல. நமது திமுக அரசின் கொள்கை என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டதாயிற்றே.
திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்குக் கூட மதச்சார்பற்ற கூட்டணி என்றுதானே பெயர். இதற்குமேல் விளக்கத் தேவையில்லை. அரசின் கொள்கை மதச்சார்பின்மையே.
முதலமைச்சர் காணொலி உரையில் முடிவாக ஒன்றை அழுத்தமாகக் குறிப்பி்ட்டுள்ளார். ‘‘ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும். திருக்கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும். உலகம் ஒன்றாகும்.’’
பழனிக் கோவிலில் அர்ச்சகர்களாக இருந்தவர்கள் யார்?
இது முத்தாய்ப்பான கொள்கை ரீதியான முத்திரையடியாகும். அந்த வகையில், மாநாடு நடைபெற்ற முருகன் கோவிலிலேயே தொடங்குவது பொருத்தமானதாக இருக்க முடியும்.
தமிழிலும் அர்ச்சனை என்ற உம்மை இழிவு சிறப்பை நீக்கி, தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு இந்து அறநிலையத் துறை உறுதியாக முன்வரவேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற ‘திராவிட மாடல்’ அரசின் மனிதத்துவ சிந்தனையை செயல்படுத்தவேண்டும். இது ஒரு கட்டத்தோடு நின்றிருக்கிறது.
இதனை முழுமையாக நிறைவேற்றி, முதலமைச்சர் காணொலியில் குறிப்பிட்ட, கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிறைவேற்றப்படவேண்டும். பழனிக் கோவிலின் உண்மை வரலாறு என்ன? இந்தப் பழனிக் கோவிலை எடுத்துக் கொண்டாலே, இதன் பூர்வீக வரலாறு என்ன? இந்தக் கோவிலை உருவாக்கியவர் யார்? பூசாரிகளாக (அர்ச்சகர்களாக) இருந்தவர்கள் யார்?
இப்பொழுது பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருப்பதன் பின்னணி சூழ்ச்சி என்ன என்பது முக்கியமானதாகும்.
‘‘அனைத்து முத்தமிழ் முருகன் மாநாடு’’ நடத்தப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவது பொருத்தமானதாகும். அதிலும் தற்போது மிஞ்சியது ஏமாற்றமே. இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சிறந்த செயல்வீரர் என்பதால், செயல்பாபு என்றே நம் முதலமைச்சர் பாராட்டினார்.
அதைவிட இப்போது ஒன்றைச் சுட்டிக்காட்டுவதும் அவசியமாகும். கோவில் துறையைப் பாதுகாக்க அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். அவர் இப்போது கோவிலிலேயே குடியிருக்கிறார் என்று கூறியதன்மூலம், அவர் தனது துறைப் பணிகளில் தேவையான ஆர்வம் தாண்டி செய்கிறார். over enthusiastic ஆக இருக்கவேண்டாம்.
முக்கியமாக அவரைப் பாராட்ட – அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமன உச்சநீதிமன்றத் தடை இன்னும் நீங்காது தொடரும் நிலை மாறவேண்டும்.
அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் நியமனங்கள், புதிய மாணவர் சேர்க்கைகள் போன்ற பணிகளில் அவர் தீவிரம் காட்டவேண்டும் என்று சொல்வது நமது உரிமையாகும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய் கொடியில் யானை… தேர்தல் ஆணையத்தில் பிஎஸ்பி புகார்!
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!