சீமான் சர்ச்சைப் பேச்சு… வீரமணி சொன்ன அந்த வார்த்தை!

Published On:

| By Selvam

பகுத்தறிவுவாதிகளுக்கு தான் நாம் எப்போதுமே பதில் சொல்ல வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசியதற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. சீமானின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில், கடலூரில் நேற்று (ஜனவரி 24) வழக்கறிஞர் வனராசு மகனும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான புனிதன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நவீனா திருமணத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்த திருமண நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கி.வீரமணி பேசும்போது, “நாம் எப்போதுமே பகுத்தறிவுக்கு பதில் சொல்கின்ற இயக்கம். மற்றவர்களுக்கு பதில் சொல்வதில்லை. பைத்தியம் பிடிக்காதவர்களுக்காக தான் நாம் பேசுகிறோம். பைத்தியம் பிடித்தவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மனநல சிகிச்சை தான் அளிக்க வேண்டும்.

ஒருவர் என்னிடம் வந்து பெரியாரை தவறாக பேசியவரை மற்றொரு கட்சி தலைவர் ஆதரிக்கிறார் என்று சொன்னார். மருத்துவமனையில் ஒரே ஒரு பைத்தியம் தான் இருக்க வேண்டும் என்று அவசியமா என்ன? மனநல மருத்துவமனைக்கு போனால் பல பைத்தியங்கள் இருப்பார்கள்.

இந்தியாவிலேயே அதிகமான பெண் நீதிபதிகள் இருக்கும் நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் தான். இதற்கெல்லாம் காரணம் பெரியார் தான். பெரியார் என்பவர் தனிமனிதரல்ல. அவர் ஒரு தத்துவம். நமக்கெல்லாம் உரிமை, சமத்துவத்தை வாங்கி கொடுத்த தலைவர் பெரியார்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share