தேசிய மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை ஆணைய உறுப்பினர் பதவியை நடிகை குஷ்பு ராஜினாமா செய்துள்ளது இன்று (ஆகஸ்ட் 14) உறுதியாகியுள்ளது.
தமிழ் திரையுலக வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த குஷ்பு, அரசியலில் கால்பதித்து திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் சேர்ந்து பின்னர் விலகினார். பின்னர் பாஜகவில் இணைந்த அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தேசிய மகளிர், குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
அவ்வப்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சம்பவங்கள் குறித்து கண்டனம் தெரிவித்து வந்த குஷ்பு, பல நேரங்களில் நேரில் சென்றும் விசாரணை நடத்தி வந்தார்.
அதே வேளையில் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு, மணிப்பூர் பெண்களுக்கு எதிரான அத்துமீறல் போன்ற மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிரான விவகாரங்களில் அமைதி காத்தது அவர் மீதான விமர்சனத்திற்கு வழிவகுத்தது.
இந்த நிலையில் கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை நாட்டை உலுக்கியுள்ள நிலையில், அதுகுறித்தும் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், ”கற்பழிப்பு, கொலை, பாலியல் வன்கொடுமை, கற்பழிப்பு, ஆசிட் வீச்சு, மற்றும் என்ன இல்லை. பெண்களுக்கு எதிரான எந்த விதமான துஷ்பிரயோகமும் நிறுத்தப்பட வேண்டும். நிர்பயா, டெல்லி முதல் கொல்கத்தா வரை, 6 மாதங்கள் முதல் 80 வயது வரை, மனித கோட் அணிந்த மிருகம் ஒருபோதும் அதிர்ச்சியை நிறுத்தவில்லை. இதை அரசியலாக்க வேண்டாம், உணர்வுப்பூர்வமாக இருங்கள், கொஞ்சம் அனுதாபங்களைக் காட்டுங்கள், பாதிக்கப்பட்டவரைப் படுகொலை செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள்.
ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமான குற்றம். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது கூட ஒரு தண்டனையாக போதாது என்று நினைக்கிறேன்” என ஆதங்கத்துடன் கருத்து பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பூ தற்போது ராஜினாமா செய்துள்ளது தெரியவந்துள்ளது.
அவர் தனது கடிதத்தை கடந்த ஜூன் 28ஆம் தேதியே அனுப்பியுள்ளார். அதனை ஏற்றுக் கொண்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக இயக்குனரிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், குஷ்புவின் ராஜினாமா உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திராவிட சித்தாந்தம் நாட்டை பிளவுபடுத்த விரும்புகிறது: ஆளுநர் ரவி
”கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் கட்டாயம் பங்கேற்போம்” : அண்ணாமலை
இப்பத்தான் அக்காவுக்கு ரோசம் வந்துருக்கு