வைரல் ஆடியோ… பாஜகவில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை – குஷ்பு விளக்கம்!

Published On:

| By Selvam

பாஜகவில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு தன்னை கூப்பிடுவதில்லை என்று குஷ்பு பேசிய ஆடியோ வைரலான நிலையில், கட்சியில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று குஷ்பு இன்று (ஜனவரி 2) விளக்கமளித்துள்ளார்.

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கொடுத்தால் மட்டும் சரியாகிவிடாது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது, பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோல நடக்கவில்லையா என்கிறார்கள்? பெண்கள் ஒன்றும் பொலிட்டிக்கல் ஃபுட்பால் கிடையாது. மாணவி எஃப்.ஐ.ஆர் விவரங்களை வெளியில் விட்டவர்களை தண்டிக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மோசமாக உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கிறார்கள்? எதிர்க்கட்சி போராட்டங்களுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? செளமியா அன்புமணியை ஏன் கைது செய்தீர்கள்?

திமுக மகளிரணி எங்கே போனது? அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக ஏன் குரல் கொடுக்கவில்லை. தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

“நீண்ட இடைவேளைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்திருக்கிறீர்கள். மதுரையில் நாளை பாஜக சார்பில் நடைபெறும் பேரணியில் கண்ணகியாக தலைமை தாங்க போகிறீர்கள். கட்சியில் ஏதாவது பிரச்சனையா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த குஷ்பு, “எந்த பிரச்சனையும் இல்லை. சென்னைக்கு வந்து 38 வருடம் ஆகிறது. இந்த 38 வருடமும் கண்ணகியாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மனதில் பட்டதை பேசுவேன். மனதில் பட்டதை செய்வேன்” என்று தெரிவித்தார்.

“பாஜக நிகழ்சிகளுக்கு தன்னை கூப்பிடவில்லை” என்று மாலை முரசு செய்தி நிருபரிடம் குஷ்பு பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானது. இதுதொடர்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் நிருபர் கேட்டபோது, “அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் தனிப்பட்ட முறையில் யாருக்கும் அழைப்பு விடுப்பதில்லை. இதுதொடர்பாக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகனிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் குஷ்பு பேசும்போது, “ஆர்ட்டிக்கிள் 21-ன் படி என்னுடைய அனுமதி இல்லாமல் தொலைபேசி உரையாடலை பதிவு செய்வது மிகப்பெரிய குற்றம்.

புதிய வருடத்தில் நம்மால் கட்சிக்கு என்ன செய்ய முடியும் என்று அதை நோக்கி தான் போக வேண்டுமே தவிர, நடந்த விஷயங்களை பற்றி பேச தேவையில்லை” என்று தெரிவித்தார்.

செல்வம்

ஒரே மாதத்தில் 30 ஆயிரம் கார்கள் விற்பனை: மாருதியில் எந்த ரக கார் அது?

“அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்கவில்லை” – அன்பில் மகேஷ் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share