உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றும் வரும் மகா கும்பமேளாவின் மெளனி அமாவசையான இன்று (ஜனவரி 29) கூட்டநெரிசல் ஏற்பட்டதில் 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தொலைபேசி வாயிலாக நிலவரத்தை கேட்டறிந்தனர்.
இந்தநிலையில், பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யாததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. காயமடைந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.
அரைகுறையான ஏற்பாடுகள், விஐபிகளின் வருகை, நிர்வாகத்தை விட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துதல் போன்றவையே இந்த கூட்ட நெரிசலுக்கு காரணம். இன்னும் பலர் புனித நீராட உள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இப்போதாவது விழித்துக் கொண்டு, இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
பக்தர்களுக்கான தங்குமிடம், உணவு, முதலுதவி போன்ற ஏற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும். அதேபோல விஐபிகளுக்கான ஏற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும். இதைத்தான் அங்குள்ள துறவிகளும், முனிவர்களும் விரும்புகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு காங்கிரஸ் தொண்டர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.