ரவிக்குமார்
மாண்புமிகு குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 31.01.2023 அன்று உரை நிகழ்த்தினார். நாடாளுமன்றத்தில் பேசும்போதே அதை மொழிபெயர்க்கும் வசதி செய்யப்பட்டிருப்பதால் குடியரசுத் தலைவர் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக இந்தியில் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை என்னால் கேட்க முடிந்தது.
அதன்பின் 22 பக்கங்கள் கொண்ட நூல் வடிவில் கொடுக்கப்பட்ட அந்த உரையின் அச்சிட்ட பிரதியையும் படித்தேன்.
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் குடியரசுத் தலைவர் தனது உரையின் ஒவ்வொரு வாக்கியத்தை வாசித்து முடிக்கும்போதும் மேசையைத் தட்டி ஒலி எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

சில நேரங்களில் குடியரசுத் தலைவர் ஒரு வாக்கியத்தைப் படித்து முடிப்பதற்கு முன்பே மேசையைத் தட்ட ஆரம்பித்துவிட்டனர். அந்த சப்தத்தை நாட்டுப் பண் இசைக்கும் வாத்திய குழுவினர் கேட்டுப் பொறாமை பட்டிருப்பார்கள் என்பது உறுதி.
”இன்று இந்தியாவில் ஒரு அரசாங்கம் இருக்கிறது”, ”இன்று இந்தியாவில் ஒரு அரசாங்கம் இருக்கிறது” என ஒன்பது முறை குடியரசுத் தலைவர் திரும்பத் திரும்ப தனது உரையில் குறிப்பிட்டார். இங்கே ஒரு அரசாங்கம் இருக்கிறதா என மக்கள் கேட்பது அவர் காதுக்கும் எட்டிவிட்டதுபோலும்.
எதற்காக இத்தனைமுறை அதை குடியரசுத் தலைவர் வலியுறுத்துகிறார் என்று குழப்பத்தோடு கேட்டுக்கொண்டிருந்த போது ‘எனக்கு ஒரு கனவு இருக்கிறது’ என்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் உரையைப்போல குடியரசுத் தலைவரின் உரையும் நிலைத்த புகழைப் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அது தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆறுதல் கொண்டேன்.

இங்கே இருக்கும் அரசாங்கத்தின் லட்சணங்களை குடியரசுத் தலைவர் ஒவ்வொன்றாக ஒன்பது முறை பதிவு செய்தார். ‘ நிலையான, அச்சம் இல்லாத, உறுதியான, உயர்ந்த லட்சியங்களோடு செயல்படக்கூடிய அரசாங்கம்;
நேர்மையாளர்களை மதிக்கிற அரசாங்கம்; ஏழை மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு காணும் அரசாங்கம்; இதற்கு முன் பார்த்திராத வேகத்தில், அளவில் செயல்படும் அரசாங்கம்- என்று இந்த அரசாங்கத்தின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போனார்.
கண்களை மூடிக்கொண்டு ஆங்கில மொழிபெயர்ப்பைக் கவனித்துக்கொண்டிருந்த எனக்கு பேசுவது குடியரசுத் தலைவர் தானா? இல்லை, பிரதமரா? என்ற சந்தேகம் வந்துவிட்டது.
குடியரசுத் தலைவரின் உரை என்பது அரசாங்கம் தயாரித்து அளிக்கிற உரை தான் என்றாலும் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நிகழ்த்தப்படும் உரை என்பதால் உண்மையான தகவல்கள் மட்டுமே அதில் இடம்பெற்றிருக்கும் என்றுதான் நாமெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
’அப்படியெல்லாம் நீங்கள் நினைத்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பல்ல’ என்பதுபோல, உண்மைக்கு மாறான பல தகவல்கள் தாராளமாக அந்த உரையில் இடம்பெற்றிருந்தன. உதாரணத்துக்கு ஒரேயொரு விஷயத்தைப் பார்க்கலாம்:
”கொரோனா பெருந் தொற்றுக் காலத்தில் உலகமெங்கும் ஏழைகள் எதிர்கொண்ட பிரச்சனைகளை நாம் பார்த்தோம். ஆனால் ஏழைகளின் உயிர்களைக் காப்பதற்கு அதிகபட்ச முன்னுரிமை கொடுத்த, ஏழை மக்கள் உணவில்லாமல் பட்டினியாகக் கிடக்கக் கூடாது என நினைத்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று”, என குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்ட போது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கைதான் என் நினைவுக்கு வந்தது.
கொரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. சுமார் 47 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்று அது கணக்கிட்டிருந்தது.

நமது அரசாங்கமோ சுமார் 5 லட்சம் பேர் தான் உயிரிழந்தனர் என்று இப்போதும் கூறி வருகிறது. இரண்டு கணக்குகளுக்கும் இடையில் சுமார் 40 லட்சத்துக்குமேல் வித்தியாசம். மதக் கலவரங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டி பழக்கப்பட்ட நமது அரசாங்கத்துக்கு இதுவொன்றும் புதிய விஷயமல்ல.
மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதால் செத்தவர்களின் எண்ணிக்கையில் பாஜக அரசு இஷ்டம்போல் விளையாடுகிறது. செத்தவர்கள் எழுந்துவந்து இழப்பீடு சாட்சி சொல்லப்போவதில்லை என்ற நம்பிக்கை.
இந்திய அரசாங்கத்தின் கொரோனா கால சித்து விளையாட்டுகளில் தடுப்பூசி தயாரிப்பில் அது நடந்துகொண்டதும் ஒன்று. தமிழ்நாட்டின் செங்கல்பட்டு பகுதியில் ஒன்றிய அரசாங்கத்தின் சார்பில் தடுப்பூசி தயாரிக்கும் மையம் மிகப்பெரிய பொருட்செலவில் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமலேயே கிடக்கிறது. கொரோனா காலத்தில் அதைப் பயன்படுத்தலாம் என நாமெல்லாம் சொன்னோம்.
தமிழ்நாடு முதலமைச்சரும் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் தடுப்பூசி தயாரிக்கும் ஒப்பந்தத்தைத் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்கே பாஜக அரசு ஆர்வம் காட்டியது (அவர்கள் கணிசமாகத் தேர்தல் நன்கொடை தந்ததற்கும் அந்த முடிவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை).
கொரோனா காலத்தில் இலவச அரிசி திட்டம் கூடுதலாக செயல்படுத்தப்பட்டது என்ற போதிலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்களை யாரும் மறந்திருக்க முடியாது. கால்நடையாகவே ஊர் திரும்பியபோது நூற்றுக்கணக்கானவர்கள் ரயிலில் அடிபட்டு செத்ததை நாம் மறந்தாலும் தண்டவாளங்கள் மறக்காது.
தற்போதைய குடியரசுத் தலைவர் தனது உரையைத் தொடங்கும்போது ’இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து நாடு அமிர்த காலத்துக்குள் நுழைந்திருப்பதாகக்’ குறிப்பிட்டார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சுதந்திரம் பொன்விழா கண்டபோது குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் இருந்தார்.

1998 ஆம் ஆண்டு இதேபோன்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அவர் என்ன பேசினார் என்று தேடிப் பார்த்தேன். தற்போதைய குடியரசுத் தலைவரைப் போல நீண்ட உரையை அவர் நிகழ்த்தவில்லை.
”நல்லாட்சிக்கான திறவுகோலை பாராளுமன்ற எண்ணிக்கை மட்டுமே வழங்கிவிட முடியாது. பாராளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற கருத்துகளைக் கடந்து ஒத்துழைப்பு, சமரசம் ஒருமித்த உணர்வின் அடிப்படையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற அனைவரின் விருப்பத்தில்தான் அந்தத் திறவுகோல் இருக்கிறது.
எனது அரசாங்கம், இந்த உணர்வை உள்ளீடாகக்கொண்டு ஆட்சி நடத்துவதில் ஒரு புதிய போக்கை வகுக்கும், அது மக்களைப் பிரிக்காது, அவர்களை ஒன்றிணைக்க முயற்சிக்கும். கடந்த காலத்தில் இருந்த குறுகிய முரண்பாட்டைக் களைந்து அதன் இடத்தில் உரையாடலை, விவாதத்தை, கலந்துரையாடலை வைக்கும்” என கே.ஆர்.நாராயணன் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
”இப்போதிருந்து, நமது முயற்சிகள் அனைத்தும் புதிய இந்தியாவை – பாதுகாப்பின்மை, பசி மற்றும் ஊழல் ஆகிய மூன்று சாபங்களிலிருந்து விடுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதாக இருக்கும். கல்வியறிவின்மை, நோய் இல்லாத இந்தியா; அதிகளவிலான மக்கள் வேலை வாய்ப்பு பெறும் இந்தியா; ஒவ்வொரு குடிமகனும், தனது சாதி, மதம் அல்லது நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல், ஒரு இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளும் இந்தியா.”
என்று தனது உரையில் கே.ஆர்.நாராயணன் தெரிவித்திருக்கிறார். ”மதச்சார்பின்மை என்பது இந்தியாவின் மரபுகளில் உள்ளார்ந்து இருப்பதாகும். நமது மதச்சார்பற்ற விழுமியங்களை நிலைநிறுத்துவதில் எனது அரசாங்கம் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிபூண்டுள்ளது.” என்று அவர் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
இந்திய சுதந்திரப் பொன்விழா காலத்தில் இந்த உரை நிகழ்த்தப்பட்டபோது இங்கே பாஜக அரசுதான் இருந்தது. ஆனால் அப்போது நிகழ்த்தப்பட்ட உரையில் ஜனநாயகம், மதசார்பின்மை முதலானவற்றைக் குடியரசுத் தலைவர் பேச முடிந்தது. அதற்குக் காரணம் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் நல்லவர் என்பதல்ல, அன்றைக்கு பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சியைத்தான் அமைக்க முடிந்தது.

அதனால்தான் மதச்சார்பின்மைபற்றியும், உரையாடலின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேச முடிந்தது. ‘மதச்சார்பின்மை’ என்பது இன்றைய ஆட்சியாளர்களுக்குக் கெட்ட வார்த்தை ஆகிவிட்டது. எனவே அதை இப்போது எந்த உரையிலும் நாம் பார்க்க முடியாது.
குடியரசுத் தலைவரின் உரை முடிந்து அவர் நாடாளுமன்ற மைய மண்டபத்திலிருந்து கிளம்பியபோது என் உள்ளத்தில் அலைமோதியது கே.ஆர்.நாராயணனின் உருவம்தான். அவர் ஆற்றியதுபோன்றதொரு உரையை 2024 இல் புதிய ஆட்சி அமையும்போது நிச்சயம் கேட்க முடியும்.

ஏனென்றால் அப்போது எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறாது, கூட்டணி ஆட்சிதான் அமையும். அது நிலையான ஆட்சியாக இருக்குமோ இருக்காதோ நிச்சயம் பொறுப்பான ஆட்சியாக இருக்கும்.
Comments are closed.