இந்தியாவில் முதன்முறையாக தண்ணீருக்கு தனி பட்ஜெட்!

அரசியல்

கோடையில் நீர் பற்றாக்குறையை போக்க கேரளாவில் தண்ணீர் பட்ஜெட் கொண்டுவரப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

கேரளாவில் 94 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய முதல் கட்ட பொது நீர் பட்ஜெட்டினை நேற்று(ஏப்ரல் 17) துவக்கி வைத்து முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றினார்.

பின்னர் அவர் பேசுகையில், “கேரளாவின் பசுமைக்கு ஏராளமான ஆறுகள், ஓடைகள், உப்பங்கழிகள் மற்றும் நல்ல அளவு மழைப்பொழிவு ஆகியவை முக்கிய பங்களிக்கின்றன. எனினும் அவற்றில் பல பகுதிகள் கோடைகாலத்தில் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

keralas water budget

மாநிலத்தில் நீர் இருப்பு குறைந்து வருவதால், வளத்தை முறையாகப் பயன்படுத்தவும், வீணாவதைத் தடுக்கவும் தண்ணீர் பட்ஜெட் உதவிகரமாக இருக்கும்.

ஒரு வளத்தை நிர்வகிக்க, முதலில் அதை அளவிட வேண்டும். அதுதான் எந்த வளத்தையும் நிர்வகிப்பதற்கான அடிப்படைக் கொள்கை.

இந்த முயற்சியை வரவேற்று, விலைமதிப்பற்ற திரவ வளத்தின் தேவை மற்றும் விநியோகத்தைக் கண்டறியவும், அதற்கேற்ப பங்கீடு செய்யவும் இது அரசுக்கு உதவும் என்று நீர் வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

நாட்டிலேயே முதன்முறை

அவர் மேலும் கூறுகையில், “ஒரு வளத்தை அளவிடாமல் நிர்வகிக்க முயற்சித்தால், அது நமது நிழலுடன் போராடுவது போல் இருக்கும். தேவை மற்றும் விநியோகத்தின் தரவு கிடைத்தால், சரியான புரிதல் கிடைக்கும். அதன் மூலம் சரியான முறையில் திட்டமிட முடியும். எனவே தண்ணீர் பட்ஜெட் நிச்சயமாக ஒரு நல்ல முன்முயற்சியாகும்.

கேரளாவில் சுமார் 46 லட்சம் திறந்தவெளி கிணறுகள் உள்ளன. ஆனால், குழாய் இணைப்புகள் வந்ததால், நீர் ஆதாரமாக இருந்த கிணறுகளை மக்கள் மறந்துவிட்டனர். எனவே, இந்த கிணறுகளை நீர் வழங்குவதற்கான முக்கிய ஆதாரமாக தண்ணீர் பட்ஜெட் தரவுகளில் சேர்க்கப்படும்.

ஒரு பகுதியில் உள்ள தண்ணீரின் இருப்புக்கேற்ப அதனை பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும். அதற்கு தான் தண்ணீர் பட்ஜெட் திட்டம் வருகிறது. இது தேவையற்ற தண்ணீரை வீணாக்குவதற்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை மையம் மற்றும் மாநில நீர்வளத்துறை மற்றும் பல்வேறு நிபுணர்கள் கொண்ட அதிகாரிகள் குழு மூலம் தண்ணீர் பட்ஜெட் தயாரிக்கப்படும்.

இது நாட்டிலேயே முதல் முறையாகும், மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும்.” என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

தமிழ்நாட்டில் வருமா தண்ணீர் பட்ஜெட்?

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பநிலையும், மாநிலத்தின் பல பகுதிகளில் நீர் பற்றாக்குறையும் காணப்படும் நிலையில், தண்ணீர் பட்ஜெட் குறித்து கேரள முதல்வரின் வார்த்தைகள் அங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன.

நீர் இருப்பில் தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம் கொண்டுள்ள மாநிலம் கேரளா. எனினும் அங்கு நாட்டிலேயே முதன்முறையாக கோடைகால தண்ணீர் பட்ஜெட்டை அறிவித்து ஆச்சரிப்படுத்தியுள்ளார் பினராயி விஜயன்.

அதே நேரத்தில் கேரளாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் நீர்வளம் குறைவு. அதிலும் கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைக்கும் வெயில், கோடைகாலத்தில் வர இருக்கும் நாட்களில் தாக்கத்தை ஓங்கி முன்னறிவித்துள்ளன.

எனவே, தமிழ்நாட்டிலும் கேரளா போன்று ’தண்ணீர் பட்ஜெட்’ அறிவிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர் சமூகநல ஆர்வலர்கள்.

கிறிஸ்டோபர் ஜெமா

பிராவோ இல்லாம கஷ்டமா இருக்கு! – ஆர்.சி.பி போட்டிக்கு பின் தோனி

சிஎஸ்கே போட்டி: டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *