கேரளாவில் நடந்துவரும் கருத்தரங்கு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மலையாளத்தில் பேசியது பலரையும் கவர்ந்துள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூரில், இந்தியாவின் 75ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு ’இந்தியா 75’ என்ற கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு ‘மலையாள மனோரமா’ செய்தி நிறுவனம் இன்று (ஜூலை 30) ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சியினை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் நேரில் சென்று பங்கேற்க முடியாத நிலையில் தனது அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது, ’மாநில கூட்டாட்சி, சுதந்திரம் மற்றும் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
’எல்லாவர்க்கு எண்டே வணக்கம்’ என்று கூறியபடி சிறிது நேரம் மலையாளத்தில் தனது உரையை நிகழ்த்தினார். மலையாள மனோரமா நடத்தும் இந்தியா 75 என்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்து,
உங்களை கண்டதில் எனக்கு மகிழ்ச்சி. இரண்டு வாரங்களுக்கு முன்பு எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
அதனையடுத்து மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் பேரில் என்னால் திருச்சூரில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு நேரில் வரமுடியவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் சிபிஎம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்று இருந்தேன். அப்போது கேரள அரசும்,
பொது மக்களும் தந்த வரவேற்பினை என்னால் மறக்க முடியாது. நான் அன்று மேடையில் பேசி முடித்தவுடன் ‘ரெட் சல்யூட், ரெட் சல்யூட்’ என்று கோஷமிட்டது இன்னும் எனக்கு கேட்டு கொண்டிருக்கிறது. கேரள மக்கள் அவர்களில் ஒருவராய் கருதி என்னுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா