வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ள நிலையில் தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்கு கேரள எம்பிக்கள் இன்று (ஜூலை 30) வலியுறுத்தி உள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நள்ளிரவு முதல் அதிகாலை வரை அங்குள்ள மேப்பாடு, சூரல்மலை, முண்டக்கை ஆகிய இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் சுமார் 200 வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில், 1000 பேர் வரை சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
கனமழை மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பாலங்கள் மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் தற்காலிக பாலம் அமைத்து மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 63 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணிகள் துரிதமாக செயல்பட வேண்டும்!
இதற்கிடையே இன்று நாடாளுமன்றம் கூடிய நிலையில் வயநாடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கேரள எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.
மக்களவையில் ராகுல்காந்தி பேசுகையில், ”வயநாடு நிலச்சரிவு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்து தர வேண்டும்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகளில் துரிதமாக செயல்பட வேண்டும். மறுசீரமைப்பு பணிகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்;
கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் இது போன்ற ஆபத்தான நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகிறது. நிலச்சரிவு விவகாரங்கள் பற்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். என்று பேசினார்.
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்!
அதே போன்று மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “இந்நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் வயநாடு மக்களுடன் நிற்கிறது; நிலச்சரிவில் சிக்கி இன்னும் எத்தனை பேர் மண்ணுக்கடியில் புதைந்துள்ளனர் என தெரியவில்லை வயநாட்டிற்கு ராணுவம் சென்றதா, மீட்புப் பணிகள் குறித்த தகவலை மத்திய அரசு வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை தொழில் வரி 35 சதவீதம் உயர்வு!
தனுஷுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம் : கார்த்தி கண்டனம்!