”இந்தி திணிப்பு நாட்டை சீரழித்துவிடும்!” கேரள எம்.பி. சாடல்

Published On:

| By christopher

நாடாளுமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக கேரளா நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் பேசிய வீடியோ இன்று (டிசம்பர் 25) வெளியான நிலையில் இணையத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையின் 11வது தொகுதியை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது.

அதில், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களான ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களை இந்தி மொழியைப் பயிற்றுவிக்கும் ஊடகமாகப் பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தனர்.

இது தொடர்பாக அக்டோபர் 16ம் தேதி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,

“நமது உயர் கல்வி மையங்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழியை முக்கிய பயிற்று மொழியாக திணிக்க முடியாது.

இந்திய அரசின் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ளபடி தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்.

kerala mp john brittas attacked hindi impositon

மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

கல்வி நிலையங்களில் ஒரு மொழியை திணிப்பது நமது கூட்டுறவு கூட்டாட்சி அமைப்பிற்கு நல்லதல்ல.” என்று அதில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கடந்த வியாழன் அன்று மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியை பயிற்றுவிக்கும் ஊடகமாகப் பயன்படுத்துவதற்கு கடுமையான வாதங்களுடன் எதிர்ப்பு தெரிவித்தார்.

மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேர நோட்டீஸை வழங்கிய பிரிட்டாஸ்,

அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, அலுவல் மொழிச் சட்டத்தின் 4(iii) பிரிவை மீறி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அத்தகைய அறிக்கையைச் சமர்ப்பிப்பது அதன் வரம்புக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், “இந்தி மொழியை நாட்டின் அலுவல் மொழியாக மாற்றுவதற்கான வெளிப்படையான மற்றும் மறைமுக முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்தியின் பரவலால் அழிந்து வரும் வளமான மொழியியல் பாரம்பரியம் கொண்ட மாநிலத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு சமீபத்தில் அறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதில் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடி/ஐஐஎம் போன்ற மத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியைப் பயிற்றுவிக்கும் ஊடகமாகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சுந்தர் பிச்சை இந்தியில் தனது தேர்வை எழுத கட்டாயப்படுத்தப்பட்டிருந்தால், இந்தியர்களாகிய நாம் அனைவரும் பெருமைப்படும் அளவுக்கு அவர் கூகுளில் முதல் இடத்தை அடைந்திருப்பாரா?

வட இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் தென்னிந்தியாவில் படிக்கின்றனர்.

வட இந்தியாவில் இருந்து மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தை தமிழ்/மலையாளம் அல்லது கன்னடத்தில் கற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?,

இதை கட்டாயப்படுத்தினால், பெரும்பாலான மாணவர்கள் திரும்பி வர வேண்டும். இந்தியை ஒரே மொழியாக்க எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது,” என்றார்.

மேலும் “அலுவல் மொழிச் சட்டத்தின் பிரிவு 4(iii) ஒன்றியத்தின் அதிகாரபூர்வ நோக்கத்திற்காக இந்தியைப் பயன்படுத்துவதில் உள்ள முன்னேற்றத்தை மறு ஆய்வு செய்வதற்கும் அதன் பரிந்துரைகளை வழங்குவதற்கும் குழுவை அனுப்ப வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கும் மொழி குறித்து ஆலோசிப்பது சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டது. உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியை பயிற்று மொழியாக பரிந்துரைத்துள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ பதிவினை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் எம்.பி ஜான் பிரிட்டாஸ் இன்று வெளியிட்டுள்ள நிலையில், அது வைரலாக பரவி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

வங்கதேச வீரர்கள் ரொம்பவே ப்ரெஷர் கொடுத்தார்கள்: அஸ்வின்

1.5 டன் தக்காளியில் கிறிஸ்துமஸ் தாத்தா !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel