இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு தலைமை ஆணையர், 2 தேர்தல் ஆணையர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் கடந்த மார்ச் 9ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், 2023ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தின்படி, தேர்தல் ஆணையர் நியமன குழுவில் தலைமை நீதிபதி இல்லாமல் பிரதமர் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட ஒரு மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூன்று பேர் இடம்பெற்றுள்ளனர்.
புதிய சட்டப்படி தேர்தல் ஆணையர்களை நியமிக்கக் கூடாது என்று காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்தசூழலில் புதிய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவின் கூட்டம் இன்று (மார்ச் 14) பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கேரளாவைச் சேர்ந்த ஞானேஷ் குமார் மற்றும் பஞ்சாபை சேர்ந்த சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிர் ரஞ்சன் சவுத்ரி, “தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக நேற்று இரவு 212 பேர் கொண்ட பட்டியல் எனக்கு அனுப்பப்பட்டது. ஒரே இரவில், 212 பெயர்களை ஆய்வு செய்து அவர்களில் மிகவும் திறமையான நபரைக் கண்டுபிடிப்பது கடினமானது. அதனால் இந்த பட்டியலில் உள்ளவர்களில், மிகவும் திறமையானவர்களை தேர்வு செய்து அதாவது ஷார்ட்லிஸ்ட் செய்து கொடுக்க சொல்லி கேட்டிருந்தேன். அந்த பட்டியல் எனக்கு வரவில்லை. தொடர்ந்து இரவே டெல்லி சென்றேன்.
இன்று கூட்டம் தொடங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன்னர் 6 பேர் கொண்ட பட்டியல் என் கைக்கு வந்தது.
தேர்தல் ஆணையர்கள் தேர்வு குழுவில் தலைமை நீதிபதி இருந்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். அப்படியானால் மத்திய அரசு தரப்புக்குதான் பெரும்பான்மை இருக்கிறது. அவர்கள் விரும்புவதுதான் நடக்கும்” என்று கூறியுள்ளார்.
புதிய சட்டப்படி தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு நாளை (மார்ச் 14) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
யார் இந்த சுக்பீர் சிங் பாதல்?
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுக்பீர் சிங் சந்து, ஓய்வு பெற்ற 1998 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
2021ஆம் ஆண்டு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையின் கீழ் தலைமைச் செயலாளராக இருந்தார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர், உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார்.
ஞானேஷ் குமார்
1988 பேட்ச் கேரளா கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தில் செயலாளராக பணியாற்றியவர். நாடாளுமன்ற விவகாரத்துறை செயலாளராகவும் இருந்துள்ளார்.
இவர்கள் இருவரும் தற்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் இணைந்து மக்களவைத் தேர்தல் பணிகளை கவனிக்க உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Ranji Trophy: 42-வது முறையாக கோப்பையை முத்தமிட்டது மும்பை அணி!
Heatwave: இந்த ‘மாவட்டத்துல’ தான் சூரியன் ரொம்ப உக்கிரமா இருக்காம்!