கேரளாவில் நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஆரிப் முகமது கான் 2019 ஆண்டு நியமிக்கப்பட்டார்.
ஆனால் தொடக்கம் முதலே ஆளுநருக்கும், அரசுக்கும் சுமூக உறவு இல்லை. அரசின் பல கோப்புகளை ஆளுநர் கிடப்பிலேயே போட்டு வைத்ததாக பினராயி அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இதேபோன்று பல்கலைக்கழங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்திலும் ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் ஏற்பட்டது.
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, கேரள மாநில அரசால் நியமிக்கப்பட்ட 9 பல்கலைக் கழக துணைவேந்தர்களையும் பதவி விலகுமாறு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை பதவியில் இருந்து நீக்குமாறும் ஆளுநர் ஆரிப் முகமது கான் அரசுக்கு நேற்று (அக்டோபர் 25) கடிதம் எழுதியிருந்தார்.
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு கேரளத்தை புரிந்து கொள்ள முடியாது என்று அண்மையில் அமைச்சர் பாலகோபால் பேசி இருந்தார்.
கே.என்.பாலகோபாலின் இந்த கருத்துகள், கேரளாவிற்கும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இடையே பிளவை உருவாக்கும் என ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னை அவமதிக்கும் விதமாக பாலகோபால் நடந்துகொண்டதாகவும், எனவே தனது ஒப்புதலை அமைச்சர் இழந்துவிட்டதாகவும்,
அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் ஆளுநர் ஆரிப் கான் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் ஆளுநருக்கு அவமரியாதை ஏற்படுத்தவில்லை, அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஒரு அமைச்சரை நீக்கும்படி ஆளுநர் கூறுவதும், அதை மாநில அரசு மறுப்பதும் இதுவரை இல்லாத ஒன்றாகும்.
இதனால் கேரளாவில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
கேரள ஆளுநரின் முடிவுகள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுக்கு சாதகமாகவே இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவை சட்டப்படி நீதிமன்றம் மூலம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கலை.ரா
என்ஐஏ விற்கு கைமாறிய கோவை கார் வெடிப்பு வழக்கு
இரட்டை குழந்தை விவகாரம்: விக்கி நயன்தாரா எஸ்கேப்… சிக்கிய மருத்துவமனை!