சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாக கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கேரள அரசுக்கும் அம்மாநில ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் நீடித்து வருகிறது. இந்தநிலையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு எதிராக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கேரள மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் அரசியலமைப்பு சட்டம் 200-வது பிரிவின் கீழ் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதில் 3 மசோதாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் மற்ற 3 மசோதாக்கள் ஒரு ஆண்டுக்கு மேலும் நிலுவையில் உள்ளன.
ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் அனைத்தும் கேரள மக்களின் பொது நலனுக்கான மசோதாக்களாகும். ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தவறியதால் மாநில மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. அரசியலமைப்பு விதிகளுக்கு புறம்பாக ஆளுநர் செயல்படுகிறார்.
எந்த ஆளுநருக்கும் அரசியலமைப்பு விதிகளை மீறுவதற்கு உரிமை இல்லை. ஆளுநரின் நடவடிக்கைகள் அரசியலமைப்பின் அடிப்படைகளை அச்சுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் வீடு கட்டுவதற்கு அனுமதி கட்டணம் உயர்வு!
இசை நிறுவனத்தை தொடங்கும் வைஜெயந்தி மூவிஸ்!
அதிமுக – பாஜக கள்ளக்கூட்டணியை அம்பலப்படுத்துங்கள்: ஸ்டாலின்