கேரள ஆளுநர் அம்மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசால் தயாரித்துக் கொடுக்கப்பட்ட உரையை, எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே வாசித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கிய நடப்பாண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக வாசிக்கவில்லை.
பெரியார், அம்பேத்கர், அறிஞர் அண்ணா, திராவிட மாடல், தமிழ்நாடு அமைதி பூங்கா போன்ற வார்த்தைகளைத் தவிர்த்துள்ளார். அதுமட்டுமின்றி சட்டமன்றத்தின் மரபை மீறி தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.

இதனால் ஆளுநர் ஆர்.என். ரவி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினார். ஆளுநருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டமும் நடைபெற்றது. இதனால் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் பல அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு ஆளுநர் விவகாரம் தொடர்பாகக் கடிதம் எழுதி அனுப்பினார். முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஆளுநரின் பேச்சிலும் செயலிலும் சில மாற்றங்களும் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று (ஜனவரி 23) கேரள சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. வழக்கம் போல் வருடத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

அப்போது கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அப்படியே படித்துள்ளார். கேரள அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் ஏராளமான முரண்பாடுகள் இருந்து வரும் நிலையில், அவர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அப்படியே படித்தது தமிழக ஆளுநரின் மீதான எதிர்ப்புகளுக்கு எதிரொலி என்று கூறப்படுகிறது.
கேரள ஆளுநர் மத்திய அரசை விமர்சித்து எழுதப்பட்டிருந்த பகுதிகளையும் தவிர்க்காமல் அப்படியே படித்துள்ளார்.
மோனிஷா
என்ன செய்வது, ஏது செய்வது? ஓபிஎஸ் அவசர ஆலோசனை!
கோபி – சுதாகரின் ‘க்ரவுட் ஃபண்டிங்’ திரைப்படம் கைவிடப்பட்டதா?