ராகுல் vs பினராயி: கேரளாவில் நடக்கும் போர்…கிறித்தவர் வாக்குகளை குறிவைக்கும் பாஜக!

அரசியல் சிறப்புக் கட்டுரை

நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்று கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருக்கும் அரசியல் சூழலை விட கேரளாவில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் சற்று வித்தியாசமானது. மற்ற மாநிலங்களில் எல்லாம் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் தான் போட்டி என்றால், கேரளாவில் இந்தியா கூட்டணிக்குள் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களுக்கு இடையில் தான் போட்டியே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) இந்த இரண்டு கூட்டணிகளுக்கு இடையில் தான் முக்கியப் போட்டியே. இங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மூன்றாவது அணியாகத் தான் நிற்கிறது.

ராகுல் காந்தி vs சிபிஎம் வார்த்தைப் போர்

இந்தியா கூட்டணியின் பிரதமர் முகமாக பலராலும் பார்க்கக் கூடிய ராகுல் காந்தி கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையில் பெருமளவிலான வார்த்தைப் போர் கேரளாவில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவின் மனைவியும், பல போராட்டங்களை களத்தில் நடத்திய மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

கேரளாவில் பிரச்சாரத்தை மேற்கொண்ட பிரியங்கா காந்தி கேரள முதல்வர் பினராயி விஜயன் பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டுள்ளார் என்று சாடினார். ”பினராயி விஜயன் ராகுல் காந்தியைத் தான் தாக்கிப் பேசுவார். பாஜகவிற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மாட்டார். அவரது பெயர் பல ஊழல்களில் அடிபட்டுள்ளது. ஆனால் மோடி அரசு அவர் மீது மட்டும் எந்த வழக்கும்  பதியாதது ஏன், எந்த ரெய்டும் நடத்தாதது ஏன்” என்று பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ராகுல் காந்தி பேசும்போது கூட, ”இரண்டு முதலமைச்சர்கள் நாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கேரள முதல்வருக்கு மட்டும் அது நடக்காதது எப்படி? நான் 24 மணி நேரமும் பாஜகவை தாக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பினராயி விஜயன் 24 மணி நேரமும் என்னை தாக்கிக் கொண்டிருக்கிறார். இது சற்று குழப்பமாக இருக்கிறது” என்று பேசி சர்ச்சையைக் கிளப்பினார்.

பதிலுக்கு பினராயி விஜயன், “கேரள முதல்வரை கைது செய்யவில்லையே என்று ராகுலுக்கு கவலையாக இருக்கிறது. உங்கள் பாட்டி இந்திரா காந்தி எமெர்ஜன்சி காலத்தில் மொத்த நாட்டையும் ஒடுக்கியபோது எங்களை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தார். ஆனால் இடதுசாரி தலைவர்கள் ஒருபோதும் உங்கள் அசோக் சவான்களைப் போல சிறைக்காக அழமாட்டார்கள்” என்று ராகுலை தாக்கிப் பேசினார்.

பாஜகவை எதிரியாக முன்வைத்து பிரச்சாரம் செய்யும் ராகுல் காந்தி ஏன் பாஜக வலிமையுள்ள மாநிலத்தில் போட்டியிடாமல் கேரளாவில் வந்து போட்டியிடுகிறார் என்ற கேள்வியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பி வருகிறது. ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையின் போதும் அவர் கேரளாவில் தான் அதிக நாட்கள் நடைபயணத்தை மேற்கொள்கிறார், அவர் உண்மையிலேயே பாஜகவிற்கு எதிராகத் தான் இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறாரா என்ற விமர்சனத்தையும் முன்வைத்தது சிபிஎம் கட்சி.

கடந்த தேர்தலின் வெற்றி விவரங்கள்

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 47.5% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களில் வெற்றி பெற்றது. 36.3% வாக்குகளைப் பெற்ற இடதுசாரிகள் கூட்டணி ஒரே ஒரு தொகுதி ஆலப்புழாவில் மட்டுமே வெற்றி பெற்றது. 15.6% வாக்குகளைப் பெற்ற பாஜக கூட்டணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

தேசிய அளவில் சுருங்கிய சிபிஎம், சிபிஐ

பாஜக, காங்கிரசுக்கு அடுத்ததாக மூன்றாவது முக்கிய கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற எண்ணிக்கை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் வெறும் மூன்றாகக் குறைந்தது. தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளும், கேரளாவில் ஒரு தொகுதியும் மட்டுமே இந்தியாவில் மொத்தமாக சிபிஎம் கட்சி வெற்றி பெற்ற மூன்று தொகுதிகள். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற எண்ணிக்கை வெறும் இரண்டாகக் குறைந்தது. அந்த இரண்டுமே தமிழ்நாட்டில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த முறை கேரளாவில் அதிக இடங்களை வெல்வதன் மூலம் இந்திய அளவில் கம்யூனிஸ்ட்களுக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்ட வேண்டும் என்று இத்தேர்தலை மிகத் தீவிரமாக அணுகியுள்ளது இடது ஜனநாயக முன்னணி.

கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கிறது?

கேரளாவின் பத்திரிக்கையான மனோரமா செய்திகள் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 13 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கும், இடதுசாரிகள் கூட்டணிக்கும் இடையில் போட்டி வலுவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

ஒருமுறை கூட ஒரு தொகுதி கூட வெல்லாத பாஜக

இந்திய வரலாற்றிலேயே பாஜக ஒரே ஒரு பாராளுமன்றத் தொகுதியில் கூட இதுவரை வெற்றி பெறாத மாநிலம் என்றால் அது கேரளா தான். ஆனாலும் சமீப ஆண்டுகளில் பாஜகவின் வாக்கு வங்கி என்பது கேரளாவில் சற்று உயர்ந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது அடித்தளத்தினை வலுவாக பதிப்பதற்கு தீவிரமாக வேலை செய்து வருகிறது. 1984 இல் 1.75% சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி 2019 இல் 13% சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

லவ் ஜிகாத்: கேரளாவின் பாஜக பயன்படுத்தும் யுக்தி

கேரளாவைப் பொறுத்தவரை அதன் மக்கள் தொகையில் 27 சதவீதம் இஸ்லாமியர்களும், 18 சதவீதம் கிறித்தவர்களும் என மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர், அதாவது 45% சதவீத மக்கள் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இந்த ஓட்டுகள் இல்லாமல் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்பதால் இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயன்று வருவதாக கேரளாவைச் சேர்ந்த அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதாவது லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்து மற்றும் கிறித்தவ மதப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் ஏமாற்றி திருமணம் செய்து அவர்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றுகிறார்கள் என்ற பரப்புரையை கேரள கிறித்தவர்கள் மத்தியில் பாஜக செய்து வருகிறது.

இதே லவ் ஜிகாத் பிரச்சாரத்தை அடிப்படையாக வைத்து தி கேரளா ஸ்டோரி என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவந்து நாடு முழுதும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதை நாம் அறிவோம். இத்திரைப்படம் சில சர்ச்களில் திரையிடப்பட்டது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

சிரியன் கிறித்தவர்களை குறிவைக்கும் பாஜக

கிறித்தவர்களின் வாக்குகளை குறிவைத்துத்தான், கடந்த ஆண்டு பிரதமர் மோடி கேரளாவிற்குச் சென்றபோது கிறித்தவ மதத் தலைவர்களை சந்தித்து பேசினார். அவர் சந்தித்ததில் பெரும்பான்மையானோர் சிரியன் கிறித்தவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். சிரியன் கிறித்தவர்கள் பெரும்பாலும் நில உடைமையாளர்களான உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பாஜக உயர்சாதி கிறித்தவ மதத் தலைவர்கள் மூலமாக, கிறித்தவர்-இஸ்லாமியர் பிரிவினை ஏற்படுத்தி கிறித்தவர்களின் வாக்குகளை அறுவடை முயன்று வருகிறது என்பது கேரளாவின் அரசியல் விமர்சகர்கள் வைக்கக் கூடிய குற்றச்சாட்டாக இருக்கிறது.

அதேசமயம் மணிப்பூரில் கிறித்தவ மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாகா இன மக்கள் தாக்கப்பட்டது கேரள கிறித்தவர்கள் மத்தியில் பாஜகவிற்கு எதிரான மனநிலையை வலுப்படுத்தியிருக்கிறது.

பாஜகவின் மூன்று தொகுதி டார்கெட்

கேரளாவில் மூன்று தொகுதிகளை முக்கியமாக குறிவைத்து வேலை செய்து வருகிறது பாஜக. குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்று கேரள பாஜக சார்பாக பார்லிமெண்டில் ஒரு எண்ட்ரியைப் போட்டு விட வேண்டும், அதேசமயம் கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் அஜெண்டா. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இந்த தேர்தலை பாஜக கையாளுகிறது.

திருவனந்தபுரம், திரிசூர் மற்றும் அட்டிங்கல் ஆகிய 3 தொகுதிகள் தான் இந்த முறை பாஜகவின் முக்கிய குறி. கேரளாவிற்கு மோடி தொடர் விசிட் அடித்த போது, இந்த மூன்று தொகுதிகள் தான் பெரும்பான்மையாக அவரது சாய்ஸாக இருந்தது.

இந்த மூன்று தொகுதிகளில் பாஜக உறுதியாக நம்பியிருப்பது திருவனந்தபுரம் தொகுதியைத் தான். இதற்காக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சரும் தொழிலதிபருமான ராஜீவ் சந்திரசேகரை காங்கிரசின் சிட்டிங் எம்.பியான சசி தரூருக்கு எதிராக திருவனந்தபுரம் தொகுதியில் இறக்கி விட்டுள்ளது பாஜக. 2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக இரண்டாம் இடம் பிடித்திருந்தது. 2006 லிருந்து தொடர்ச்சியாக ராஜ்யசபா உறுப்பினராக இருக்கும் ராஜீவ் சந்திரசேகர் முதல்முறையாக இந்த முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிறுவனர்களில் ஒருவர் ராஜீவ் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. நாயர்களின் வாக்குகள் கணிசமாக பாஜகவிற்கு இருப்பதால், கிறித்தவர்களின் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றால் திருவனந்தபுரத்தை பிடித்து விடலாம் என்பது பாஜகவின் கணக்கு.

அடுத்ததாக திரிசூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபியை பிரபலமான முகமாக முன்வைத்து களமிறக்கியிருக்கிறது பாஜக. ”நான் இங்கு வெற்றி பெற்றால் நான் மத்திய அமைச்சராவேன், திரிசூரிலிருந்து ஒரு மத்திய அமைச்சர், இது மோடியின் கேரண்ட்டி” என்று சுரேஷ் கோபி பிரச்சாரம் செய்து வருகிறார்.

மூன்றாவதாக அட்டிங்கல் தொகுதியில் வெளியுறவுத் துறை இணையமைச்சரும், கேரள மாநில பாஜகவின் முன்னாள் தலைவருமான வி.முரளிதரனை களமிறக்கியிருக்கிறது. மகாராஷ்டிராவிலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரை இம்முறை லோக்சபாவில் போட்டியிட இறக்கியிருக்கிறது பாஜக.

இங்கு ஈழவ சமூக மக்களின் வாக்குகள் அதிகமாக இருப்பதால் அவர்களின் வாக்குகளை பாஜக குறிவைத்திருக்கிறது. குறிப்பாக கேரளாவில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பெரும் சீர்திருத்தத்தை நிகழ்த்திய நாராயண குருவை இந்துத்துவத்தின் அடையாளமாக மாற்ற பாஜக முயன்று வருகிறது. இதன் காரணமாக சிபிஎம் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையில் பல வார்த்தைப் போர்கள் நடைபெற்றுள்ளன. மேலும் நாராயண குருவின் சிவகிரி மடத்திற்கு பாஜக தலைவர்கள் பல விசிட் அடித்து, மடத்தினை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் ஈழவ மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவும் பாஜக திட்டமிட்டிருப்பதாக கேரள அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

மொத்தமாக பார்த்தோமென்றால் கருத்துக்கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக இருக்கின்றன. களம் எங்களுக்குத் தான் சாதகமாக இருக்கிறது என்று தனது கட்டமைப்பு பலத்தினைக் காட்டி கம்யூனிஸ்ட்கள் நிற்கிறார்கள். பாஜக கேரளாவில் எப்படியாவது எண்ட்ரி போட எக்கச்சக்க சோசியல் எஞ்சினியரிங் வேலைகளை செய்து வருகிறது. ஆனாலும் அது கேரளாவில் இன்னும் பெரிதாக எடுபடவில்லை என்பதே கள நிலவரமாக இருக்கிறது.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“மத உணர்வை தூண்டும் பேச்சு”: மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

முஸ்லிம், இந்து வார்த்தைகள் எங்கே இருக்கிறது? மோடியிடம் விவாதிக்க நேரம் கேட்ட காங்கிரஸ்!

“மக்களிடம் மதரீதியான குழப்பங்களை ஏற்படுத்தும் பாஜக”: முத்தரசன் தாக்கு!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *