கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் இன்று (அக்டோபர் 1) காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அதற்காக, கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கொடியேரி பாலகிருஷ்ணன் இன்று (அக்டோபர் 1) காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான கொடியேரி பாலகிருஷ்ணன், கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான மார்க்சிஸ்ட் பொலிட் பீரோவில் உறுப்பினராக இருந்தார்.
2006-2011 ஆண்டுகால மார்க்சிஸ்ட் அரசில் வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக கொடியேரி பாலகிருஷ்ணன் பதவி வகித்துள்ளார்.
அதேபோல், 2001-2004 மற்றும் 2011-2016ல் கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் கொச்சியில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் மாநில மாநாட்டில், தொடர்ந்து மூன்றாவது முறையாக கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
என்றாலும், உடல்நலக்குறைவு காரணமாக தற்காலிகமாக அந்த பொறுப்பில் இருந்து விலகி, சிகிச்சை பெற்றுவந்தார்.
1982, 1987, 2001, 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் தலச்சேரி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், பாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
அந்த அஞ்சு பேர் மட்டும் என்னோட வரத் தயங்கறாங்க: சசிகலா ஓப்பன் டாக்!
மேயரைப் பற்றி ஆபாச வீடியோக்கள்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?