முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கேரளாவில் இன்று (ஜூலை 18) ஒருநாள் பொது விடுமுறை அளித்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 79.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிமோனியா காய்ச்சல் காரணமாக இவர் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.
கேரளாவின் முதல்வராக 2004 மற்றும் 2011 ஆண்டுகளில் பொறுப்பேற்று 8 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார்.
இவரின் மறைவையடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஒரே ஆண்டில் நாங்கள் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஒரே நேரத்தில் தான் மாணவர் வாழ்க்கையின் மூலம் அரசியலுக்குள் வந்தோம்.
நாங்கள் ஒரே நேரத்தில் பொது வாழ்க்கையை நடத்தினோம். அவருக்கு விடை கொடுப்பது என்பது மிகவும் கடினம். உம்மன் சாண்டி திறமையான நிர்வாகியாகவும், மக்கள் வாழ்வில் நெருங்கிய ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உம்மன் சாண்டி மறைவையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று ஒருநாள் பொது விடுமுறை அளித்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவரது மறைவுக்கு கேரள அரசு சார்பில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்!
தோனியின் பைக் காதல்: ஆச்சரியத்தில் உறைந்த வெங்கடேஷ் பிரசாத்
கருங்கடல் ஒப்பந்தம்: ரஷ்யா விலகல் – உணவு தானிய பஞ்சம் வருமா?