அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு தடை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு இடைக்கால தடை தொடரும் என டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 25) உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர், கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மே 10-ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர், ஜூன் 2-ஆம் தேதி மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது நீதிமன்ற காவல் ஜூன் 2ஆம் தேதி முடிவடைந்தது.
இந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த ஜாமீன் மனு ஜூன் 20ஆம் தேதி விடுமுறை கால அமர்வு நீதிபதி நியாய் பிந்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியும், ரூ.1 லட்சம் பிணைத் தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை, டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது.
அமலாக்கத்துறையின் இந்த வழக்கை அவசர வழக்காக ஜூன் 21 அன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுதிர்குமார் ஜெயின் மற்றும் ரவீந்திர துடேஜா அமர்வு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்த டெல்லி ஐகோர்ட்
இந்நிலையில், கெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு இன்று (ஜூன் 25) நீதிபதி சுதிர்குமார் ஜெயின் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி சுதிர்குமார் ஜெயின் கூறியதாவது, “அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சரியாக விசாரிக்கவில்லை.
ஒருவருக்கு ஜாமீன் வழங்க முடிவு செய்வதற்கு முன்னர், அமலாக்கத்துறைக்கு சரியான வாய்ப்புகளை நீதிமன்றம் வழங்கி இருக்க வேண்டும். அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் முறையாக ஆய்வு செய்யவில்லை.
எனவே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மீதான இடைக்கால தடை நீட்டிக்கிறது” என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி கோரிக்கை விடுத்தார்.
வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்.வி.என். பாட்டி தலைமையிலான அமர்வு, “பொதுவாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைக்காது. விசாரணையின்போதே நீதிபதிகள் தீர்ப்பை வழங்கிவிடுவார்கள்.
ஆனால், கெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிராக தடை விதிக்கப்பட்ட மனுவின் தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்து இருப்பது வழக்கத்திற்கு மாறான செயல் என்பதால் பொறுத்திருந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாதி மத அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கமாட்டேன் : நீதிபதி ஜெயச்சந்திரன்
கள்ளச்சாராய மரணம்: சிபிஐ விசாரணை… ஆளுநரிடம் எடப்பாடி மனு!