மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளஅரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 28) தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நாட்டில் முதலமைச்சராக இருக்கும் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.
இதனை கண்டித்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும், சர்வதேச நாடுகளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக விமர்சித்து வருகின்றன.
இதற்கிடையே ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிக்கும் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த சுர்ஜித் சிங் யாதவ் என்ற சமூக ஆர்வலர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பிரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர், “முதல்வர் பதவி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வாய்ப்பில்லை. நிர்வாக பிரச்னை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரோ, டெல்லி துணை நிலை ஆளுநரோ தான் நடவடிக்கை எடுக்க முடியும். குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி உத்தரவிட முடியாது” என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜியின் புதிய மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!