அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் : புதுமை பெண் திட்ட விழாவில் கெஜ்ரிவால்

Published On:

| By Kalai

தமிழகத்தில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப்பள்ளிகளை தொடங்கி வைத்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று காலை 10.30 மணிக்கு, தமிழக அரசின் புதுமை பெண் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (செப்டம்பர் 4) சென்னை வந்தார்.

புரட்சிகரமான திட்டம்

இன்று காலை தொடங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “இன்று ஆசிரியர் தினம், அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமுதாயத்தின் அடிப்படை ஆசிரியர்கள் தான். புதுமைப் பெண் உட்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம். புதுமைப் பெண் திட்டத்தை துவக்கி வைக்க என்னை அழைத்தபோது உண்மையிலேயே ஆச்சர்யம் ஏற்பட்டது.

இதுபோன்ற முதல்வரை பார்த்ததில்லை

ஒரு மாநில முதலமைச்சர், இன்னொரு மாநிலத்துக்கு சென்று பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை கண்டதில்லை. ஆனால் அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல், அதேபோல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என்று சொல்லி, அதை இப்போது அமைத்தும் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியைப் போல் தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் தமிழ்நாட்டிலும் இன்று தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாநில அரசும் நல்ல முன்னெடுப்புகளை எடுத்துவருகின்றன.

அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்

ஒவ்வொரு மாநிலமும் பிற மாநிலங்களிடம் இருந்து நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான மாணவியர், திறமை இருந்தும், வறுமை காரணமாக தங்கள் படிப்பைக் கைவிடும் சூழல் உள்ளது. ஆனால் புதுமைப்பெண் திட்டம் மாணவியரின் இடைநிற்றலைத் தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம். இந்தியா முழுவதும் புதுமைப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். டெல்லி, தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.

ஸ்டாலினை அழைப்பேன்

அரசுப்பள்ளிகளை மேம்படுத்தாவிட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறியே. நல்ல, தரமான, இலவசக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும். அரசுப்பள்ளிகளை மூடினால் ஏழை, எளிய குழந்தைகள் கல்வி கற்க எங்கே செல்வர்? அப்படி இருந்தால் நாடு வளராது. இனி கல்வி சார்ந்த புதிய திட்டங்களை துவக்கும் போதும் ஸ்டாலின் என்னை அழைப்பார் என்று நம்புகிறேன் ; நானும் புதிய திட்டங்களை துவக்கி வைக்க டெல்லிக்கு வருமாறு ஸ்டாலினை அழைப்பேன்” என்று கெஜ்ரிவால் பேசினார்.

கலை.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share