டெல்லி தேர்தல்: களத்துக்கு வந்த யோகி ஆதித்யநாத்… பதிலடி கொடுத்த கெஜ்ரிவால்

Published On:

| By Selvam

டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக களத்தில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், டெல்லியின் கரோல் பங்க் பகுதியில் நேற்று (ஜனவரி 23) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட யோகி ஆதித்யநாத், “தலைநகர் டெல்லியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் சாலைகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. முன்பெல்லாம் டெல்லியின் சிறந்த உள்கட்டமைப்பு, சாலை வசதி, தூய்மைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் டெல்லிக்கு வருவதாக பேசி வந்தனர். ஆனால், இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை.

டெல்லியை விட உத்தரபிரதேசத்தில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாக, உத்தரப்பிரதேசம், டெல்லியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை நீங்கள் ஒப்பிட்டு பார்க்கலாம். டெல்லியை விட உத்தரப்பிரதேசத்தில் மின்சார கட்டணம் குறைவு.

டெல்லியில் சாலைகளில் குழிகள் உள்ளதா அல்லது குழிகளில் சாலை உள்ளதா என யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சாலைகள் காட்சியளிக்கின்றன” என்று தெரிவித்தார்.

யோகி ஆதித்யநாத்துக்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், “10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் உத்தரபிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையை யோகி ஆதித்யநாத்தால் மேம்படுத்த முடியவில்லை. பாஜக ஆளும் 20 மாநிலங்களிலும் அரசுப் பள்ளிகளின் தரம் மிக மோசமான நிலையில் தான் இருக்கிறது.

எங்களது அமைச்சர்களிடமிருந்து யோகி ஆதித்யநாத் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகிறேன். கல்வி உள்கட்டமைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை பாஜகவுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக எங்கள் கல்வி அமைச்சரை உத்தரபிரதேசத்திற்கு அனுப்பி வைக்கிறோம்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel